சமூகப் போராளி இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இளையபெருமாள் முயற்சியால்தான் சிதம்பரத்தில் இரட்டைப் பானை முறை முடிவுக்கு வந்தது என்பதைப் பேரவையில் முதல்வர் நினைவுகூர்ந்தார். அவரது நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 1924 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் தேதி பிறந்தவர் எல்.இளையபெருமாள்.பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அவர், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக எல். இளையபெருமாள் 1979இல் நியமிக்கப்பட்டர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் 20 வருடங்கள் பணியாற்றியவர். கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி இளையபெருமாள் மறைந்தார்

இந்நிலையில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கே.எஸ்.அழகிரி நன்றி: தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும் விளங்கிய பெரியவர் எல்.இளையபெருமாளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் வருகிற ஜூன் 26 முதல் நூற்றாண்டு விழா கொண்டாடுவதென முடிவு செய்து, சிதம்பரத்தில் அவரது நினைவை போற்றுகின்ற வகையில் மணி மண்டபம் கட்டுவதென அறிவித்திருக்கிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றிப் பெருக்கோடு வரவேற்கிறேன். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு இணைந்து பணியாற்றியவன் என்ற முறையில் இந்த அறிவிப்பை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தமது வாழ்நாள் முழுவதும் பட்டியலின மக்களின் நலனுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடிய மனித நேயமிக்கவராக வாழ்ந்து, சமூக நீதிக் காவலராக விளங்கிய எல். இளையபெருமாள் அவர்களது புகழை பரப்புகிற முயற்சியை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனைவரது பாராட்டுகளையும் பெறுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.