சினிமாவான இராமானுஜர் வாழ்க்கை
இராமானுஜர் இந்து சமய புரட்சித் துறவி. சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர். அனைத்து மதத்தினரும் புகழும் இந்து துறவி. அவரது வாழ்க்கை தற்போது 'ஸ்ரீ ராமானுஜர்' என்ற பெயரில் சினிமாவாக தயாராகி உள்ளது.
ரவி.வி.சந்தர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார், டி.கிருஷ்ணன் தனது ஹயகிரிவாஸ் சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்து ராமானுஜராக நடித்துள்ளார். மாதவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி தயாரிப்பாளரும், நடிகருமான டி.கிருஷ்ணன் கூறியதாவது: இந்தப்படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறேன். இது ஒரு பீரியட் படம். படத்தின் டீசர் வெளியானபோது. ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். இளையராஜா சார் என்னை அழைத்து அதுப்பற்றி விசாரித்தார். 2018ம் ஆண்டிலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம். பல்லேறு சூழல்களால் தாமதமாகிவிட்டது. படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் இறந்துவிட்டார். கேமராமேன் இறந்துவிட்டார். இப்படி நிறைய கஷ்டங்களை கடந்து இந்த படம் உருவாகி உள்ளது.
இது வெற்றி பெறாமல் நான் விடமாட்டேன். இராமானுஜர் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்தப்படத்தை தயாரித்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன். இளையராஜா சார் இந்தப்படத்தில் 5 பாடல்கள் தந்திருக்கிறார். விரைவில் அந்தப்பாடல்கள் நேரு ஸ்டேடியத்தில் லைவாக இசையமைக்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்திற்கு இதில் நடித்த நடிகர்கள் தவிர வேறு யாருமே சப்போர்ட் பண்ணவில்லை. சில பிரச்சினைகள் வந்தபோது தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ளவே இல்லை. இந்தப் படத்தின் தலைப்பை போல் வேறு சில படங்களுக்கும் வைக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்த்திருந்தபோதும் மற்ற படங்களுக்கும் இதே தலைப்பை வைக்க அனுமதி கொடுப்பது என்ன நியாயம்? இதுவே ரஜினி படம், விஜய் படத்தில் டைட்டிலை வேறு படத்திற்கும் வைக்க அனுமதிப்பீர்களா? பிரச்சனைகளை தீர்க்கதானே தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கு.
இந்தப் படத்திற்காக திருவாடுதுறை ஆதினம் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார். அதேபோல் நடிகர் ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி ஆகியோரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். கலை இயக்குனர் மகி ரொம்பவே சிரமப்பட்டு செட் போட்டு கொடுத்தார். ஸ்ரீரங்கம் செட், திருப்பதி செட், சோழ மன்னன் அரண்மனை செட் என்று படத்திற்கு பிரமாண்டம் சேர்த்துள்ளார் கலை இயக்குனர் மகி. படத்தில் சோழ மன்னன் அரண்மனை காட்சி மட்டும் இருபது நிமிடங்கள் இடம் பெறுகிறது.
ஆயிரம் வருடங்களுக்கு முன் இராமானுஜர் சமூக நீதிக்காக என்னவெல்லாம் செய்தார் என்று இந்தப் படம் பார்க்கும்போது புரியும். என்றார்.