சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இது மீண்டும் தமிழக அரசியலில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர காவல்துறை முன்வர வேண்டும்.
தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும்” என்று தெரிவித்தார்.. இதுதான் அதிமுக – பாஜக இடையே மீண்டும் முணுமுணுப்பை கிளப்பி விட்டுள்ளது.
மெகா கூட்டணி: காரணம், கடந்த வருடம் நாமக்கல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்” என்றார்.. இந்த பேச்சு உடனடியாக டெல்லிவரை பாஸ் செய்யப்பட்டுவிட்டதாகவும், இதனால் எடப்பாடிக்கான நெருக்கடிகள் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்ல, எடப்பாடியின் இந்த மெகா கூட்டணி குறித்தும், கூட்டணி குறித்து 2024-ல் நாங்கள் முடிவு செய்வோம் என்று எடப்பாடி சொன்னது குறித்தும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அப்போதே செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அண்ணாமலை “எடப்பாடி பேட்டியில் என்ன சொன்னார் என்று 2 முறை திரும்ப திரும்ப செய்தியாளர்களை கேட்டார்.. கூட்டணி குறித்து 2024-ல் நாங்கள் முடிவு செய்வோம் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என்றதுமே, சிறிது நேரம் யோசித்துவிட்டு, அதற்கு பிறகுதான் அண்ணாமலை ரியாக்ட் செய்தார்..
எடப்பாடி கடுப்பு: “விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்.. அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம்’ என்று மட்டும் பதிலளித்துவிட்டு நகர்ந்து சென்றார்.. தமிழக பாஜக மற்றும் அதன் தலைவர் அண்ணாமலையுடன் அதிமுகவுக்கு மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாஜகவை பொறுத்தவரை சில தொகுதிகளை குறி வைத்து களப்பணி செய்து வருகிறது.. குறிப்பாக 10 தொகுதிகள் இதில் அடக்கம். இந்த 10 தொகுதிகளுமே அதிமுக செல்வாக்குள்ள பகுதிகள்தான்.. அதனால், இந்தமுறை கூட்டணி சேர்ந்தாலும், மறுபடியும் தொகுதி விவகாரத்தில் குழப்பம் ஏற்படும் என்கிறார்கள்.. இதில் ராமநாதபுரம் தொகுதியும் அடக்கம்.. இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக கோரிக்கையும் வைத்துள்ளது என்றும் இதனால் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் தெரிகிறது.
யார் அந்த 2 பேர்: தற்போது அதிமுகவுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திப்பது கிட்டத்தட்ட உறுதியாகியாகிவிட்டதால், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையிலான விரிசல் தென் மாவட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்ற பேச்சு அடிபடுகிறது… அந்தவகையில், ராமநாதபுரம் தொகுதியும் சலசலப்புகளை கொண்டுவரலாம் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது.. திமுக ஊழலை அண்ணாமலை வெளியிட்டிருந்த நிலையில், அதிமுக மீதான ஊழலையும் வெளிக்கொணர போவதாக மறைமுகமாக அறிவித்திருக்கிறார்.. இதனால் உச்சக்கட்ட கடுப்பாகி உள்ளதாம் அதிமுக தரப்பு.. போதாக்குறைக்கு “அதிமுக ஊழல் லிஸ்ட் எங்கே” என்று நாம் தமிழர் கட்சியின் சீமானும் விடாமல் தினம் தினம் கேள்வி கேட்டு கொண்டேயிருப்பதும் அதிமுகவுக்கு எரிச்சலை தந்து வருகிறது.. தொடர்ந்து தங்களை சீண்டி வருவது குறித்து, பாஜக தலைவர்களிடமே சொல்லி வருத்தப்பட்டாராம் எடப்பாடி பழனிசாமி.
கமலாலயம்: அதனால்தான் அண்ணாமலையை கடுப்பாக்கவே, “மெகா போட்டி” என்ற வார்த்தையை எடப்பாடி பயன்படுத்தியதாக சொல்கிறார்கள்.. குறிப்பாக, இது விஷயமாக பேரவை வளாகத்தில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் மனம்விட்டுப் பேசினாராம் எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்தான், மேற்கண்ட 2 தலைவர்களும்.. இவர்களிடம் எடப்பாடி வருத்தப்பட்டு பேசியிருப்பதும், “மெகா கூட்டணி” என்று எடப்பாடி நேற்றைய தினம் அறிவித்துள்ளதும், அடுத்தடுத்த சலசலப்புகளை கமலாலயத்தில் உண்டுபண்ணி வருகிறதாம்.