மின்கட்டண குறைப்பை வலியுறுத்தி 20-ல் கதவடைப்பு போராட்டம்: டான்ஸ்டியா தகவல்

சென்னை: டான்ஸ்டியா பொதுச் செயலாளர் வி.நித்தியானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்வாரியம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்.10-ம் தேதி மின்கட்டணத்தை உயர்த்தியது.

இதில், மின்கட்டணம், நிலைக் கட்டணம் மற்றும் உச்சநேர பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றுக்கு ஒருதலைபட்சமாக மின்கட்டணத்தை வசூலித்து வருகிறது. இவற்றை குறைக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைக் குறைக்குமாறு பலமுறை அரசிடம் கோரிக்கைவிடுத்தும் நிறைவேற்றப்படவில்லை.

இதேபோல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு நலவாரியம் அமைக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி, முதல்வரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் சுந்தரதேவன் கமிட்டி, முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில்சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும் வேண்டி 50 பரிந்துரைகள் செய்யப்பட்டன. இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்.

மேலும், தற்போது சிட்கோ நிறுவனம் நகர்ப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில்மனைகளை 99 வருட வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற நடவடிக்கையை கைவிட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (ஏப்.20) ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.