“மே 3-க்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம்"- போக்குவரத்துக் கழக சம்மேளனம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் சிஐடியூ-வின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் அ.சௌந்தரராசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பு ஒன்றாகவும், ஆனால், அரசு நடந்துகொள்வது வேறுவிதமாகவும் இருக்கிறது.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வைப்பு நிதி, காப்பீட்டு நிதி உள்ளிட்டவற்றிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு எடுத்து செலவழித்துவிட்டது. ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக வழங்கவேண்டிய பஞ்சப்படி இதுவரை வழங்கப்படவில்லை. இப்படியாக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணப் பலன்களை வழங்காமல் அரசு இழுத்தடித்துவருகிறது.

போக்குவரத்துக் கழகத்தில் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் மட்டும் 900 அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,424 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு 600 பேரை மட்டும் நிரந்தரப் பணியாளர்களாக எடுத்துவிட்டு, மீதமுள்ள 800 காலியிடங்களுக்கு தனியார் அவுட் சோர்ஸிங் மூலம் தொழிலாளர்களை நியமிக்க அரசு திட்டமிட்டு அதற்கான டெண்டரும் வெளியிட்டிருக்கிறது.

இது போன்ற தொழிலாளர்கள் மீதான விரோதப்போக்கை கைவிடுவதுடன், நிரந்தரத் தொழிலாளர்களை, போக்குவரத்துக் கழகத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்த பணப் பலன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 3-ம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முன்னறிவிப்பு நோட்டீஸ் போக்குவரத்துக் கழகத்திடம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) வழங்கப்படும். 15 நாள்களுக்குள் அரசு பேச்சுவார்த்தை நடத்தி எங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், மே 3-ம் தேதிக்குப் பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

75 ஆண்டுகளாக இருக்கும் தொழிற்சாலைகள் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவரவிருக்கிறது. இந்தத் திருத்தம், தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையில் பல பாதிப்புகளை உண்டாக்கும். தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கையே திமுக அரசு பின்பற்றுவதாகச் சந்தேகம் எழுந்திருக்கிறது. எங்கள் கோரிக்கை நியாயமானது என்பதால், மற்ற தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.