சென்னை: மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வரும்நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், மெட்ரோ ரயில் மேம்பால பாதைக்காக, துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன..
சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ துாரத்திற்கு 61 ஆயிரத்து 843 கோடி ரூபாயில், மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம்: இதில், சோழிங்கநல்லுார் – மாதவரம் தடத்தில் 47 கிமீ துாரத்திற்கு அமைகிறது. மொத்தம் 46 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த தடத்தில் பெரும்பாலும், உயர்மட்ட பாதையில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.. மாதவரம், ரெட்டேரி, அண்ணா நகர் பகுதிகளில், ஏகப்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் மேம்பால பாதையில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன..
அதேபோல, கோயம்பேடு மார்க்கெட், சாய்நகரில் இருந்து ஆழ்வார் திருநகர் வரை, மேம்பால பாதைக்காக, தூண்கள் அமைக்கும் பணிகளும் வேகம் எடுத்து வருகின்றன. மேலும், மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் பூந்தமல்லி முதல் பவர் ஹவுஸ் வரை முதலில் ரெயில் சேவைகள் தொடங்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருந்தது..
துரித பணி: அதன்படி பூந்தமல்லி- போரூர் இடையேயான பாதையை வரும் 2025-ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, போரூர்-பவர் ஹவுஸ் இடையேயான பாதையை 2026-ம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பகுதியிலும் பணிகள் துரிதமாகி வருகின்றன. இந்த நிலையில் மாதவரம் -ரெட்டேரி சந்திப்பு இடையேயான மெட்ரோ ரெயில் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, 2026-ம் ஆண்டுக்குள், மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இதற்காக இதுவரை 65 தூண்கள் கட்டப்பட்டு உள்ளன. மாதவரம் டெப்போ மெட்ரோ, அசிசி நகர், மஞ்சம்பாக்கம், வேல் முருகன் நகர், ரெட்டேரி சந்திப்பு ஆகிய 7 இடங்களில் ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
மஞ்சம்பாக்கம்: இதன்மூலம் மாதவரம், மஞ்சம்பாக்கம், ரெட்டேரி போன்ற வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் இன்னும் 3 வருடங்களில் மெட்ரோ ரெயிலில் பயணிக்க முடியும். இந்த பயண தொலைவு 11 கிலோ மீட்டர் ஆகும். மாதவரம் டெப்போ மெட்ரோ சுரங்க ரெயில் நிலையமாக இருக்கும். மீதமுள்ள ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதை ரெயில் நிலையங்களாக இருக்கும். மாதவரம் டெப்போவில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்படும்” என்று கூறினார்.