ஹரியாணா: ஹரியாணா மாநிலத்தில் தனியாருக்குச் சொந்தமான அரிசி அரவை ஆலையில் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில், “கர்னல் மாவட்டத்தின் தரோரி கிராமத்தில் உள்ளது சிவ் சக்தி அரிசி அரவை மில். 3 அடுக்குமாடி கொண்ட இந்த ஆலையில் ஊழியர்கள் ஒரு தளத்தில் தங்கியுள்ளனர். நேற்று வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் ஆலையில் அவர்கள் தங்கும் தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே புலம்பெயர்ந்த தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இடிபாடுகளில் நிறைய பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது சுமார் 200 தொழிலாளர்கள் அந்தக் கட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.இதில் எத்தனை பேர் இன்னும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரியாததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.