RCB v CSK: போராடிய பெங்களூர், டெத் ஓவர்களில் கிடுக்கிப்பிடி போட்ட சென்னை; EA கிரிக்கெட் ஆடிய அணிகள்!

`கேப்டன் கோபம் vs கேப்டன் கூல்’ (RCB v CSK) என விளம்பரப்படுத்தியது ஐ,பி.எல். `இவங்க ரெண்டு பேரும் எதிரெதிர் டீம்ல ஆடுறது இதுதான் கடைசி தடவை’ என மீம்கள் வழியே கண்ணீர் சிந்தியது இன்ஸ்டாக்ராம். `எங்காகினும் பார்த்ததுமுண்டோ, தீ நீருடன் சேர்வதுமுண்டோ?’ என சிலிர்த்துப் போயின யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள். `இன்னிக்கு மேட்ச் பெங்களூருல, அதிரடிக்கு பஞ்சமிருக்காது’ என முதல் பந்திலிருந்தே மிஸ் செய்யாமல் பார்த்துவிட வீடு போய் சேர்ந்தன பல்லாயிரம் நெஞ்சங்கள். இவ்வளவு எதிர்பார்ப்பிற்கும் சரியாய் தீனி போட்டது சென்னையும் பெங்களூருவும் நேற்று மோதிக்கொண்ட மேட்ச்.

மேட்ச் ரிப்போர்ட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு சின்ன பயிற்சி. உங்கள் வீட்டில் மொட்டை மாடி இருக்கிறதா? ஒரு சின்ன கல்லை (சின்னக் கல்லாய் இருக்கவேண்டியது மிக அவசியம்) எடுத்துக்கொண்டு மாடிக்கு போய் நில்லுங்கள். மொட்டை மாடி போக முடியாதவர்கள் தெருவில் கூட நின்று கொள்ளலாம். இப்போது கையிலிருக்கும் கல்லை ஏதாவது ஒரு திசையில் ஓங்கி விட்டெறியுங்கள். கம்மி எடை காரணமாக காற்றில் மிதந்து அது சில மீட்டர்கள் தள்ளிப் போய் விழும். நீங்கள் நிற்குமிடம்தான் பேட்டிங் க்ரீஸ். அந்தக் கல் போய் விழுந்த இடம்தான் பவுண்டரி லைன். இவ்வளவுதான் ஆர்.சி.பியின் ஹோம் கிரவுண்டான சின்னசுவாமி ஸ்டேடியம்.

தொட்டாலே பந்து பறந்துவிடும் என்பதால் இந்த ஆடுகளத்தில் எப்போதுமே ஹை ஸ்கோர் ஆட்டங்களே! இதுவரை இங்கு நடந்துள்ள எண்பத்தி சொச்ச ஐ.பி.எல் போட்டிகளில் 23 முறை முதலில் பேட்டிங் செய்யும் அணி 200+ ரன்கள் எடுத்திருக்கிறது. போக, இரவில் பனியும் அதிகம் விழுமென்பதால் பொதுவாகவே டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பௌலிங்கையே தேர்வு செய்யும். நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டு ப்ளெஸ்ஸியும் அதையே செய்தார். அந்த அணியில் பெரிதாய் மாற்றங்களில்லை. இம்பேக்ட் பிளேயர் ஆப்ஷனில் மட்டும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது எனச் சொல்லிவிட்டுப் போனார். சென்னை அணியைப் பொறுத்தவரை ஆட்டத்திற்கு ஒருவர் காயம்பட்டு வெளியேறுகிறார். கடந்த போட்டியில் அப்படி வெளியேறிய மகாலாவிற்குப் பதில் பதிரானா.

டெஸ்ட்டில் தனி முத்திரை பதித்துவிட்ட சிராஜ் இந்த சீசனில் அபாரமான பவர்ப்ளே பௌலராகவும் உருவெடுத்து வருகிறார். அவரின் முதல் ஓவரில் மூன்றே ரன்கள். பார்னெல் வீசிய அடுத்த ஓவரில் பட்பட்டென ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து ரன் வேட்டையைத் தொடங்கிவைத்தார் கான்வே. கெய்க்வாட் ‘ஒண்ணு பூப்பாதை இல்லனா சிங்கப்பாதை’ ரகம். நேற்றைய நாளில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது பூப்பாதை. பூ போல பந்தைத் தொட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். சி.எஸ்.கே இந்த சீசனில் கண்டெடுத்திருக்கும் மும்பை முத்தான ரஹானே ஒன் டவுனில்.

RCB v CSK

மறுபக்கம் போன மேட்ச்சில் கலக்கிய வைசாக்தான் பௌலிங். வந்தவரை ஸ்கூப் ஷாட் பவுண்டரி அடித்து வரவேற்றார் கான்வே. ரஹானேவும் தன் பங்கிற்கு இழுத்துவைத்து சாத்த பந்து கூரையைத் தொட்டுத் திரும்பி வந்தது. மற்ற நாள்களில் சாதுவாய் இருக்கும் பூசாரி, திருவிழாவின்போது சாமி வந்து ஆடுவாரே அப்படி இறங்கி ஆடினார் ரஹானே. பார்னெல் வீசிய ஆறாவது ஓவரில் ரஹானே செய்த 14 ரன்கள் சம்பவத்தில் பார்னெலுக்கு புனே வாரியர்ஸில் இருந்த காலமெல்லாம் நினைவிற்கு வந்து போயிருக்கும். ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 53/1. ரன்கள் லீக்காவதை உணர்ந்து ஸ்பின்னைக் கொண்டு வந்தார் டு ப்ளெஸ்ஸி. அடுத்த இரண்டு ஓவர்கள் பெரிதாய் ரன்களில்லை.

RCB v CSK

‘இதுதான் சமயம்’ என தன் துருப்புச்சீட்டான ஹர்ஷலை டு ப்ளெஸ்ஸி இறக்க, அந்தச் சீட்டை சுக்கல் சுக்கலாய் கிழித்தெறிந்தார்கள் கான்வேயும் ரஹானேவும். 14 ரன்கள். மீண்டும் ஹஸரங்கா வந்தே பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டியதாய் இருந்தது. அவர் போட்ட கூக்ளியில் ரஹானே தன் ஆஃப் ஸ்டம்ப்பைப் பறிகொடுத்தார். ‘ஓ நீங்க ப்ராப்பர் புட்வொர்க் இருக்குற பேட்ஸ்மேனைத்தானே இப்படி ஏமாத்தி அவுட்டாக்குறீங்க. இப்பப் பாரு எங்காளு கல்லுத் தூண் மாதிரி நிப்பான்’ என தூபேவை இறக்கினார் தோனி. கேப்டன் சொன்னதை அப்படியே கேட்கும் கிளிப்பிள்ளை தூபே, மேக்ஸ்வெல்லை அடித்த சிக்ஸ், கூரையை எல்லாம் தாண்டி சென்னை புறநகரிலிருக்கும் பெங்களூரு ஏர்போர்ட்டில் போய் விழுந்தது.

அதன்பின் நடந்ததெல்லாம் சின்ன வயதில் EA கிரிக்கெட் வீடியோ கேமில் நாம் ஆடியதுதான். ஒருபக்கம் கான்வே ப்ராப்பர் கிரிக்கெட்டிங் ஷாட்களை ஆடி அரைசதம் தொட, மறுபக்கம் தூபே, `கால்பக்கத்துல குத்தினாலோ டாஸ் போட்டாலோ அப்புறம் பந்தை நீ பக்கத்தூரு போய்தான் பொறுக்கிட்டு வரணும்’ என நின்ற இடத்தில் ருத்ரதாண்டவமாடினார்.

ஹர்ஷல், சிராஜ், வைசாக் என ஒரு பௌலரையும் விட்டுவைக்காமல் கிரிக்கெட்டை மறந்துவிட்டு அவர் பாட்டுக்கு ஜாலியாய் பேஸ்பால் ஆட, பந்து பௌலர் கையில் இருந்ததைவிட கேலரியில் ஆடியன்ஸ் கையில்தான் அதிக நேரமிருந்தது. 11வது ஓவர் தொடங்கி 15வது ஓவர் முடிவு வரை மொத்தம் 68 ரன்கள். இருவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 200க்கு குறையவில்லை. ஸ்கோர் 165/2.

RCB v CSK

16வது ஓவரில் ஹர்ஷல் வீசிய ஸ்லோ யார்க்கரைக் கணிக்கமுடியாமல் க்ளீன் போல்டானார் கான்வே. 45 பந்துகளில் 83 ரன்கள். அந்தப் பக்கம் தூபே அசரவே இல்லையே. அருவாளைத் தூக்கி நிற்கும் அய்யனார், வாண்டுகளை விளையாட்டுக்கு விரட்டுவது போல பௌலர்களை விரட்டிக்கொண்டிருந்தார். பார்னெல் போராடியே அவரை பெவிலியன் அனுப்ப வேண்டியதாய் இருந்தது. 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த தூபே அடித்தது ஐந்து சிக்ஸர்கள், இரண்டே பவுண்டரிகள். அம்புட்டு வெறி மாப்பிள்ளைக்கு! அதன்பின் வந்த ராயுடு சின்ன கேமியோ ஆடிவிட்டு வெளியேற, வந்தார் சென்னை அணி நிர்வாகம் அடுத்த ஃபினிஷர் என நம்பும் ஜடேஜா. இன்னிங்ஸை முடிப்பார் என்பதால் அவர் ஃபினிஷரா இல்லை அவருடையே பேட்டிங் வாழ்க்கையே முடியும் தறுவாயிலிருப்பதால் அவர் ஃபினிஷரா எனக் கேள்வி கேட்குமளவிற்கு ‘தரமான பேட்டிங்’. நான்கு பந்துகளில் மூன்று ரன்கள். ஸ்கோர் 19 ஓவர் முடிவில் 210/5.

கடைசி ஓவர ஹர்ஷல். முதல் பந்தில் ஜடேஜா சிங்கிள். மொயின் தலை உயரத்திற்கு வந்த பந்தை அம்பயர் நோ பால் எனச் சொல்ல, மனசாட்சியே இல்லாமல் அதற்கு ரிவ்யூ எல்லாம் எடுத்தார் மேக்ஸ்வெல். ஃப்ரீ ஹிட். ‘ஒரு எக்ஸ்ட்ரா வாங்கினா இன்னொரு எக்ஸ்ட்ரா ஃப்ரீ’ என சொல்லுமளவிற்கு எக்ஸ்ட்ரா மழை பொழிந்தார் ஹர்ஷல். சாவகாசமாய் ஒருவர் பெங்களூருவில் தன் ஆபிஸிலிருந்து கிளம்பி ட்ராஃபிக்கைக் கடந்து நகரின் மறுமுனைக்கு போகும்வரையில் அந்த ஒரு ஓவரை மட்டுமே வீசிக்கொண்டிருந்தார் ஹர்ஷல். அதுவும் ஓவரின் மூன்றாவது பந்தில் திரும்பவும் மொயினின் நெஞ்சுக்கு அவர் பந்தால் குறிவைக்க, ‘போட்டது போதும்’ எனப் பந்தை பிடுங்கிக்கொண்டு அனுப்பிவைத்தார்கள் நடுவர்கள்.

மேக்ஸ்வெல் மீதி ஓவரைத் தொடர்ந்தார். அவரின் முதல் பந்தே ஜடேஜா சிக்ஸர். அதற்கடுத்த பந்தில் அவர் அவுட்டாக மொத்தக் கிரவுண்டும் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தது. இறங்கியது தோனி ஆயிற்றே. சின்னசுவாமி ஸ்டேடியம் தோனிக்கு விருப்பமான வேட்டைக்களம். இங்கே ஆடியிருக்கும் 10 இன்னிங்ஸ்களில் 463 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 180. ஆனாலும் அவரால் முடிந்தது ஒரு சிங்கிள் மட்டுமே. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 226/6. ஐ.பி.எல்லில் சென்னை அணியின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இது. அதேசமயம் 2011-லிருந்து இப்போது வரையிலான சென்னை அணியின் ஹை ஸ்கோரும் இதுவே.

RCB v CSK

ஐ.பி.எல் வரலாற்றில் வெற்றிகரமாய் சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் 224. சேஸ் செய்தது ராஜஸ்தான். ராயல் சேலஞ்சர்ஸைப் பொறுத்தவரை ஒரே ஒருமுறைதான் பஞ்சாப்புக்கு எதிராக 200+ ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. மறுபக்கம் அதிகமுறை 200+ ரன்கள் அடித்த அணியில் சென்னைக்கே முதலிடம். இதுவரை 25 போட்டிகளில் 200க்கும் அதிகமான ரன்கள். அதில் 19-ல் வெற்றி. இப்படி எல்லா புள்ளிவிவரங்களும் ஆர்.சி.பிக்கு வில்லனாய் இருக்க ஓப்பனிங் இணை மீது பாரத்தைப் போட்டுவிட்டு களத்தில் இறங்கியது அந்த அணி.

ஆகாஷ் சிங் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் இறங்கி வந்து மிட்விக்கெட் பக்கம் பவுண்டரி அடித்தார் கோலி. நான்காவது பந்திலும் அதேபோல முயற்சி செய்ய பேடில் பட்டு ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது பந்து. நம்பிக்கை நாயகன் கோலி அவுட்! தலையில் கைவைத்து அமர்ந்தார்கள் பெங்களூரு ரசிகர்கள். அதே ஓவரின் கடைசி பந்தில் லோம்ரோர் கொடுத்த மிக எளிதான கேட்ச்சை தன் கைகளுக்கு நடுவே வழுக்கிவிழ வைத்து வித்தை காட்டினார் தீக்‌ஷனா. துஷார் தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டு ப்ளெஸ்ஸியின் பேட் எட்ஜில் பட்டு பின்னால் வந்த கேட்ச்சை நழுவவிட்டார் தோனி. யானைக்கும் அடிசறுக்கும் மொமென்ட். கேட்ச் விட்டது கேப்டன் என்பதால் மூச்சுகாட்டாமல் திரும்பிப் போனார் துஷார். நஷ்ட ஈடாய் தன் விக்கெட்டை கடைசி பந்தில் பறிகொடுத்தார் லோம்ரோர்.

RCB v CSK

ஆனால் அதன்பின் நடந்த சம்பவத்திற்கு லோம்ரோரே களத்தில் இருந்திருக்கலாம் என நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் சென்னை ரசிகர்கள். ஆகாஷ் சிங்கின் அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் சாத்தினார் மேக்ஸ்வெல். நான்காவது, ஐந்தாவது ஓவர்களில் டு ப்ளெஸ்ஸி தன் பங்கிற்கு ஓவருக்கு 16 ரன்கள். பார்முலா ஒன்னில் ஓடும் கார்களின் ஸ்பீடோமீட்டர் கூட இவ்வளவு சீக்கிரம் ஏறாது. இவர்கள் இருவரும் அடித்த அடியில் ஸ்கோர்போர்டு ராக்கெட் வேகத்தில் ஏறியது. பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 75/2. ஏழாவது ஓவரில் ஜடேஜா வந்துதான் கொஞ்சம் கம்மியாய் ரன்களை விட்டுக்கொடுத்தார்.

பதிரானா வீசிய எட்டாவது ஓவரில் 12 ரன்கள். ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் இன்னும் ஒரு 12 ரன்கள். இன்னும் ஐந்து ரன்கள் வந்திருக்கவேண்டியது. ரஹானே தன் அபாரமான பீல்டிங்கால் ஒரு சிக்ஸைத் தடுத்ததால் 12 ரன்களோடு நின்றது. 23 பந்துகளில் அரைசதம் தொட்டார் டு ப்ளெஸ்ஸி. பதிரானா வீசிய பத்தாவது ஓவரில் இரக்கமே இல்லாமல் மேக்ஸ்வெல் பந்தைப் பதம் பார்க்க, அவருக்கு 15 ரன்கள். 24 பந்துகளில் அவரும் அரைசதம் தொட்டார். ஸ்கோர் 121/2. சட்டென தொட்டுவிடும் தூரத்திற்குள் வந்துவிட்டது டார்கெட். அதற்கடுத்த இரண்டு ஓவர்களில் 20 ரன்கள். ‘மாப்பிள்ளை’ படத்தில் விவேக்கை ஓவர்டேக் செய்து பறக்கும் தனுஷைப் போல டு ப்ளெஸ்ஸியைத் தாண்டி பறந்தார் மேக்ஸ்வெல்.

இதெல்லாம் பார்த்து நீங்கள் பதறினால் நீங்கள் சி.எஸ்.கே ஆட்டத்திற்குப் பழக்கமில்லாதவர் என அர்த்தம். இல்லை இந்த ஸ்கோரைப் பார்த்து `கண்டிப்பாய் சேஸ் செய்துவிடலாம்’ என சந்தோஷப்பட்டால் உங்களுக்கு ஆர்.சி.பி எனும் அணியும் பரிச்சயமில்லை என அர்த்தம்.

RCB v CSK

12வது ஓவரின் முதல் பந்தில் தீக்‌ஷனா வீசிய பந்தைத் தூக்கியடிக்கப் பார்த்து அதை விண்ணில் ஏவினார் மேக்ஸ்வெல். அது எலான் மஸ்க் அனுப்பிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டைத் தொட்டு கீழே வர, காத்திருந்து கழுகாய் கொத்தினார் தோனி. ஒருவழியாய் எதிர்பார்த்த விக்கெட் விழுந்தது சென்னைக்கு. மேக்ஸ்வெல் 76 ரன்கள் 36 பந்துகளில். ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ படத்தில் நாலாபக்கமும் எதிரிகளை விசிறியடிக்கும் தோரைப் போல ஒரு ஆட்டம். ஆனாலும் அந்தப் பக்கம் டு ப்ளெஸ்ஸி விடுவதாய் இல்லை. ‘யப்பா டீமுல எடுக்காம விட்டது தப்புதான்ப்பா, கொஞ்சம் மனசு வைப்பா’ என கண்ணீர் விட்டார்கள் சென்னை ரசிகர்கள். அவரும் ஆடியது போதுமென களைத்து மேக்ஸ்வெல்லைப் போலவே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஐ.பி.எல்லில் தோனி பிடிக்கும் 140வது கேட்ச் இது.

தினேஷ் கார்த்திக்கின் வேலை முதல் பந்திலிருந்தே அடிக்க ஆரம்பிப்பதுதான். இந்த முறை மிட்விக்கெட்டை குறிவைத்தே சிக்ஸரும் பவுண்டரிகளும் அடித்துக்கொண்டிருந்தார். நேரம் பார்த்து தோனி அங்கே ஆளை நிறுத்த அவரும் காலி. ‘சர்ப்ரைஸ்’ என சரியாய் இம்பேக்ட் பிளேயர் பிரபுதேசாயை இறக்கினார்கள். அவர் களம் கண்டபோது தேவை மூன்று ஓவர்களில் 36 ரன்கள். பிரஷர் ஏற ஏற குக்கர் மேலிருக்கும் விசில் போலவே பதறும் ஆர்.சி.பியின் மிடில் ஆர்டர். அப்புறமென்ன, அதே பழைய கதைதான். சீட்டுக்கட்டுகள் பொலபொலவென உதிர்வது போல ஷபாஸ் அகமது, பார்னெல் என வரிசையாய் நடையைக் கட்டினார்கள். பிரபுதேசாய் கடைசி நேரத்தில் அடித்த சிக்ஸர்கள் எல்லாம் அவரை அடுத்த ஆட்டத்தில் ப்ளேயிங் லெவனில் எடுக்க வேண்டுமானால் உதவும். இந்த ஆட்டத்தின் வெற்றிக்கல்ல. கடைசி ஓவரில் பதிரானா யார்க்கர்கள் இறக்கி போட்டியை முடித்துவைத்தார். எட்டு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி. கான்வே ஆட்டநாயகன்.

RCB v CSK

நேற்றைய போட்டியில் சென்னை 16, ஆர்.சி.பி 17 என மொத்தமாய் 33 சிக்ஸ்கள். ஒரு போட்டியில் 33 சிக்ஸ்கள் அடிக்கப்படுவது ஐ.பி.எல்லில் இது மூன்றாவது முறை. மூன்று முறையுமே சென்னை அணி விளையாடிய போட்டிகள்தான். டெத் ஓவர் பௌலிங்கை ஒருவழியாய் சமாளித்து வென்று டாப் 3-க்குள் நுழைந்துவிட்டது சென்னை. இன்னும் ஆடவிருக்கும் ஒன்பது போட்டிகளில் ஐந்து சென்னை சேப்பாக்கத்தில் என்பதால் இந்த முறை ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகின்றன.

மறுபக்கம் `டீக்கடை போர்டு மாறினாலும் டீத்தூள் மாறமாட்டுதே’ கதைதான் ஆர்.சி.பி. லோம்ரோர், ஷபாஸ் அகமது, அனுஜ் ராவத் என அவர்களின் மிடில் ஆர்டர் சுத்தமாய் எடுபடவில்லை. போதாக்குறைக்கு சிராஜைத் தவிர ஏனைய பௌலர்கள் வள்ளலாய் மாறி ரன்களை வாரிக்கொடுக்கிறார்கள். ப்ளே ஆஃப்பிற்கு போக டாப் ஆர்டரின் பேட்டிங் மட்டுமே போதாது. முன்னெப்போதையும் விட களத்தில் ஆக்ரோஷமாய் இருக்கும் கிங் கோலி, கோப்பை அடிக்க அவரின் அணி வீரர்களும் அதே அளவுக்கு ஆக்ரோஷமாய் ஆடுவது முக்கியம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.