நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்பக்காற்று தீவிரமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல மாநிலங்களில் கடந்த வாரம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் வெப்பக்காற்று தீவிரமாக வீசி வெப்பநிலை உச்சம் தொடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பான வானிலை மையத்தின் அறிக்கையின் படி, நாட்டின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயல்பை விட வெப்பம் உச்சம் தொடும் என்றுள்ளது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் தீவிர வெப்பக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக, பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் கல்வி நிறுவனங்கள் இயக்கும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு வங்கத்தில் ஒரு வார காலம் கல்வி நிறுவனத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரிபுராவில் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் கல்வி நிறுவனம் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு காலை 6.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கி 11 மணிக்கு நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பாட்னாவில் பள்ளிகளை காலை 10.45 மணிக்கு நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியிலும் மதியத்திற்குப் பிறகு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
newstm.in