திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சந்தியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). திருச்சியிலுள்ள ஜவுளிக்கடை ஒன்றில் சேல்ஸ்வுமனாக வேலை செய்துவருகிறார். தினமும் ஊரிலிருந்து பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வந்த சந்தியா, வழக்கம்போல நேற்றிரவு வேலை முடித்துவிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில் லால்குடிக்கு வந்திருக்கிறார். அதே பேருந்தில், லால்குடி அருகேயுள்ள கபரியேல்புரம் பகுதியைச் சேர்ந்த லூர்து ஜெயக்குமார் (29) என்பவரும் வந்திருக்கிறார்.
அப்போது லூர்து ஜெயக்குமார் தன்னுடைய செல்போனில் சந்தியாவை போட்டோ எடுத்து கிண்டல் செய்திருக்கிறார். இது தெரிந்து ஆத்திரமடைந்த சந்தியா, ‘எதுக்காக என்ன போட்டோ எடுக்குற?’ எனக் கேட்டிருக்கிறார். இதில் சந்தியாவுக்கும், லூர்து ஜெயக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பேருந்தில் இருந்தவர்களும் லூர்து ஜெயக்குமாரைக் கண்டித்து சண் போட்டிருக்கின்றனர். இதற்கிடையே, சந்தியா தன்னுடைய அண்ணன் குப்புசாமிக்கு போன் மூலமாக நடந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்டு கோபமடைந்த குப்புசாமி தன்னுடைய நண்பர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு, கபரியேல்புரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறார். பேருந்து வந்ததும் அதில் ஏறிய குப்புசாமி, தன்னுடைய தங்கையிடம் பிரச்னை செய்த லூர்து ஜெயக்குமாரின் சட்டையைப் பிடித்து தரதரென பேருந்திலிருந்து கீழே இறக்கியிருக்கிறார். நடப்பதையெல்லாம் பார்த்து ‘பிரச்னை வேண்டாம். விட்டுடுங்கப்பா!’ என பேருந்தில் இருந்தவர்கள் சொல்ல, ‘ஒன்னும் பண்ண மாட்டோம்ங்க. போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் கூட்டிட்டுப் போறோம்’ எனக் கூறியிருக்கிறார் குப்புசாமி.
ஆனால், லூர்து ஜெயக்குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லாமல், மாந்துரை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகே வைத்து ‘என் தங்கச்சியை எப்படிடா போட்டோ எடுக்கலாம். எதுக்குடா அவளுக்கு தொந்தரவு கொடுக்குற. எடுத்த போட்டோவை டெலிட் பண்ணுடா!’ எனக் கடுமையாக அடித்து உதைத்திருக்கின்றனர். இதில் வயிறு, மார்பு பகுதிகளில் பலத்த அடிபட்டதால், லூர்து ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த லால்குடி போலீஸார், லூர்து ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், லூர்து ஜெயக்குமார் இறப்புக்குக் காரணமான குப்புசாமியைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாண்டி உள்ளிட்ட இருவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.