"தென்னிந்தியத் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கான காரணம் இதுதான்!"- வெற்றிமாறன் சொல்லும் லாஜிக்

`Dakshin CII Summit 2023′ நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்கள் குறித்தும் திரைத்துறை குறித்தும் பேசி வருகின்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன், திரைப்படத்துறை குறித்தும் தென்னிந்தியத் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

வெற்றிமாறன்

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், “கலைக்கு மொழியில்லை, எல்லைகள் இல்லை என்று கூறுவார்கள். ஆனால், கலைக்கு மொழி, கலாசாரம் போன்ற எல்லைகள் இருக்கின்றன. கலையை நுகர்பவர்களுக்குத்தான் அந்த எல்லைகள் இல்லை. கலை அதன் எல்லைக்குள் இருந்து செயல்படும்போது, அது அதன் எல்லையைக் கடந்துபோகும். அதுதான் இந்த கோவிட் காலங்களில் நடந்தது. ஓ.டி.டி மூலம் நாம் எல்லோரும், எல்லா விதமான படங்களையும் பார்த்தோம். வெவ்வேறு காலங்களில், மொழிகளில், வெவ்வேறு நிலத்தில் நடக்கும் உலக சினிமாக்களை வெவ்வேறு கோணங்களில் பார்த்தோம், ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். அது சினிமா ரசனையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘கே.ஜி.எஃப்’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் இந்திய அளவில், உலகளவில் சென்று சேர்ந்தது. இப்படங்களின் சிறப்பு என்னவென்றால் இப்படங்கள் அந்தந்த நிலத்தின் மக்களுக்காக எடுக்கப்பட்டது. அந்தந்த கலாசாரம், மொழி மற்றும் அவரவர் பாணியில் எடுக்கப்பட்ட படங்கள். இவை உலகளவில் சென்று சேர்ந்து வெற்றிபெற்றிருக்கின்றன.

எனவே கலை என்பது ரொம்பவும் ஆழமான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், மக்களின் வாழ்வியலையும் பிரதிபலிப்பதாக இருந்தால் அது உலகளவில் சென்று சேரும், வரவேற்பைப் பெரும். நம்முடைய கதைகளை நாம் சொல்கிறோம், அது எல்லைகளைத் தாண்டி நல்ல வரவேற்பைப் பெறுகிறது.

காந்தாரா

நம் மக்களுக்கான படம், நாம் கொண்டாடுகிற படத்தை மற்றவர்களும் ஏற்றுக் கொண்டு அது எல்லைகள் கடந்து செல்வதுதான் புரட்சி. அதுதான் ஆஸ்கர் வாங்குவதை விடவும் பெரிய சாதனை.

அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற படங்கள் மார்க்கெட் மற்றும் வசூல் ரீதியாகவும், திரைத்துறையிலும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவற்றைத்தான் இப்போது நடந்திருக்கும் நல்ல முன்னேற்றமாகப் பார்க்கிறேன்.

அந்த வகையில்தான் சமீபகாலமாகத் தென்னிந்தியத் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதற்குக் காரணம் நம் நிலம் சார்ந்த, மொழி சார்ந்த, கலாசாரம் சார்ந்த மக்களுக்கான கதைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இவைதான் தென்னிந்தியப் படங்கள் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதன் மிகப்பெரிய வீச்சுக்கும் காரணமாக இருக்கின்றன” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.