நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டோரின் பற்களை ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதில் ‘பல்வீர் சிங் மற்றும் சிலர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அத்துடன், 323 (காயம் ஏற்படுத்துதல்), 324 (மரணத்தை விளைவிக்கும் அயுதங்களைப் பயன்படுத்துதல்), 326 (ஆபத்தான ஆயுதங்கள் மூலம் கொடுங்காயம் ஏற்படுத்துதல்) 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்திலுள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் டி.எஸ்.பி-யான பொன் ரகு இந்த வழக்கை விசாரித்தார்.
பல்வீர் சிங்மீது புகார் அளித்தவரான சுபாஷ் இன்று தன்னுடைய மனைவி சங்கீதா, வழக்கறிஞர் மகாராஜன் ஆகியோருடன் மாவட்ட குற்றப்பிரிவில் தாமாக முன்வந்து ஆஜராகி வழக்கு குறித்த தகவல்களைத் தெரிவித்தார். அவரிடம் பல்வீர் சிங்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.
குற்றப்பிரிவு போலீஸார் தன்னுடைய புகார் தொடர்பாகவும் தனக்கு ஏற்பட்ட நிலை பற்றியும் விரிவாக விசாரணை செய்ததாக பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்தார். இந்த விசாரணை தனக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது பற்களை பல்வீர் சிங் பிடுங்கியபோது ஸ்டேஷனில் இருந்த போலீஸாரும் உதவியதால் அவர்கள்மீதும் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என சுபாஷ் கேட்டுக் கொண்டார்.
பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞரான மகாராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சம்பவம் நடந்ததும் சப்-கலெக்டர் விசாரணை நடத்தப்பட்டபோதே பல்வீர் சிங்மீது வழக்கு பதிவுசெய்திருக்க வேண்டும். தாமதமாக வழக்கு பதிவுசெய்தபோதிலும் அதில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், காவலர்களையும் சேர்த்திருக்க வேண்டும்.
வெவ்வேறு காவல் நிலையங்களில் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் பாதிக்கப்பட்டவர்களும் தனித்தனி வழக்குகளில் தொடர்புடையவர்கள். அதனால் ஒரே வழக்காக பதிவுசெய்யாமல் தனித்தனி வழக்குகளாகப் பதிவுசெய்யப்பட்டு தனித்தனியே விசாரணை நடத்தினால் மட்டுமே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும்.
பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கொலை முயற்சி என்ற பிரிவையும் கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். வழக்கில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்கள் கொடுத்திருக்கும் மருத்துவச் சான்றிதழ்களையும் சாட்சியங்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கொடூரமாக பற்கள் பிடுங்கப்பட்ட காவல் நிலையங்களிலுள்ள ரத்தக் கறைகளை தடயவியல் நிபுணர்கள் மூலம் சேகரித்து சாட்சியங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சார் ஆட்சியர் தனது விசாரணையைத் தொடங்கிய நாளிலேயே சர்ச்சைக்குரிய காவல் நிலையங்களைக் கட்டுப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாததன் மூலம் சாட்சியங்களை அழிக்க காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர் ,நீதித்துறை நடுவர் ஆகியோர்மீதும் நிர்வாகரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அடையகருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், சந்தோஷ் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நாளை சென்னையில் விசாரணை நடத்துகிறது அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஜராகிறார்கள். அத்துடன், நெல்லை மாவட்ட எஸ்.பி-யும் நேரில் ஆஜராகவிருக்கிறார்.
இதனிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி-யான பல்வீர் சிங் மூலம் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் குறித்து சப்-கலெக்டர் விசாரணைக்குப் பின்னர் அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை நடத்தினார். அவர் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. பல்வீர் சிங் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களால் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் பணியாற்றிய காவல்துறையினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.