வேங்கைவயல் விவகாரம் | “நாகரிகம் தவறி பேசாதீர்கள்…” – செய்தியாளரிடம் திருமாவளவன் காட்டம்

சென்னை: வேங்கைவயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றுகிற முயற்சியில் அரசு ஈடுபடவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வேங்கைவயல் விவகாரம் குறித்து, கண்காணிப்புக் குழுவிடம் பேசியிருக்கிறோம். ஏற்கெனவே சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம். தற்போது சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம். அரசு, அந்த விவகாரத்தில் நிலவும் உண்மைகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்வதற்கான உறுதியை அளித்திருக்கிறார்கள். எனவே அரசின் நடவடிக்கையின் மீது நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்றார்.

அப்போது சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகிறதே? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாட்கள் என்பது ஒரு பிரச்சினை இல்லை. இத்தனை நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், ராமஜெயம் கொலை வழக்கில், இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக நாம் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா?

சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் இருக்கலாம். விசாரணையில் இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் இருக்கலாம். தமிழக அரசு தலித் மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கைவயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றுகிற முயற்சியில் அரசு ஈடுபடவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், ஒரு சின்ன கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து, நீண்ட நாட்களாக விசாரணை நடப்பதாக சொல்லப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், “சின்ன கிராமம், பெரிய கிராமம் என்பதல்ல பிரச்சினை. அரசு எதிராக இல்லை. அரசுக்கு தலித் மக்களுக்கு எதிராக செயல்படவேண்டிய தேவை இல்லை. உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கட்டும். அதில் என்ன அவசரம், காலக்கெடு ஏதாவது இருக்கிறதா? புலனாய்வில் அதிகாரிகளுக்கு இருக்கும் தேக்கத்திற்கான காரணம் இதுவரை நமக்கு தெரியவில்லை” என்றார்.

அப்போது அந்த செய்தியாளர், நீங்களும் தற்போது திமுககாரர் போல பேசுகிறீர்களே? என்றார். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “இந்த மாதிரி பேசுகிற வேலை வைத்துக்கொள்ள வேண்டாம். இதுபோல பேசுவதை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் நாகரிகம் இல்லாத பேச்சு. உங்களுக்கும் ஒரு நாகரிகம் வேண்டும். நாகரிகம் தவறி பேசாதீர்கள்.

உண்மைகளின் அடிப்படையில் கேள்வி கேளுங்கள். உங்களுடைய கருத்தை திணிக்காதீர்கள். திமுகவை எதிர்த்து எங்களைப் போல போராட்டம் யாரும் நடத்தவில்லை. தலித் மக்கள் பிரச்சினைகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். நாளை கூட கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்தவுள்ளோம். திமுக கூட்டணியில் இருப்பதால், இதுபோன்று அநாகரிகமாக பேசக்கூடாது” என்றார். இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பின்போது விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.