உடுப்பி: கர்நாடக மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரான அண்ணாமலை, ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து, அண்ணாமலையிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, அங்கு பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்ற மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை, மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்ததாக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய்குமார் சொரகே குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் பல்வேறு குழுக்கள் 4 இடங்களில் அண்ணாமலையை வழிமறித்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த சோதனையில் தேர்தல் விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று உடுப்பி தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கர்நாடக மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை காலை 9.55 மணிக்கு உடுப்பி வந்தடைந்தார். அப்போது, அவரது உடமைகளை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை குழு சோதனை செய்தது. அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலான எந்த பொருளும் கண்டறியப்படல்லை. பறக்கும் படையின் மற்றொரு குழுவினர், தி ஓஷன் பேர்ல் ஓட்டலுக்கு அண்ணாமலை பயணித்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில், ஒரு பையில் 2 ஜோடி ஆடைகள், ஒரு தண்ணீர் பாட்டில் மட்டுமே இருந்தன.
இதுதவிர, காவுப் பகுதிக்கு சென்ற அண்ணாமலையின் வாகனத்தை இடைமறித்து சோதனை நடத்தப்பட்டது. மேலும், அண்ணாமலை ஓட்டலுக்கு திரும்பியவுடன் அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், இந்த 4 இடங்களிலும் நடைபெற்ற சோதனைகளில் விதிமீறல் தொடர்பாக எந்த செயலும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.