சென்னை: Thalapathy 68 (தளபதி 68) விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
நடிகர் விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கடைசியாக வாரிசு படத்தில் நடித்தார். தமிழ் – தெலுங்கு என பைலிங்குவலாக உருவான அந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. விஜய்தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோ என்று வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு பேசிய சூழலில் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகாததால் விஜய் கொஞ்சம் அப்செட் என்றே பலர் கூறினர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்: வாரிசு படத்துக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். படத்துக்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இப்படத்தில் மீண்டும் இரண்டு பேரும் இணைந்திருப்பதால் லியோ மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னையில் இப்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
விஜய் 68 யார்?: இந்நிலையில் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய்யின் படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அந்த லிஸ்ட்டில் அட்லீ பெயர் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், நான்காவது முறையாக அட்லீயும், விஜய்யும் இணைவார்கள் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே அவர்கள் இணைந்த படங்களில் மெர்சல், தெறி ஆகிய படங்கள் மெகா ஹிட்டானதால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது என்ற பேச்சு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
தெலுங்கு இயக்குநரா?: தற்போது விஜய் 68 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது பாலகிருஷ்ணாவை வைத்து வீரசிம்ஹா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் மல்னேனி விஜய்யிடம் ஒரு கதையை கூறியிருப்பதாகவும், அது விஜய்க்கு பிடித்துப்போக அடுத்ததாக அவர் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவதா இல்லை அதிர்ச்சி அடைவதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

ஏன் மீண்டும் விஷப்பரீட்சை?: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றியது. தெலுங்கில் மார்க்கெட்டை உயர்த்த விஜய் அந்தப் படத்தில் நடித்தாலும் கதை ரீதியாகவும், மேக்கிங் ரீதியாகவும் ரொம்பவே வீக்காக இருந்தது. எனவே விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் இணைவது தேவையில்லாத விஷப்பரீட்சை என விஜய் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
யார் தயாரிப்பாளர்? எவ்வளவு சம்பளம்?: இதற்கிடையே படத்தை அட்லீயோ, கோபிசந்த்தோ யார் இயக்கினாலும் விஜய்யின் சம்பளம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்றும் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. வாரிசு படத்துக்காக விஜய்க்கு 130 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், விஜய் 68 படத்துக்காக அவருக்கு 140 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் படத்தை ஆர்.பி.சௌத்ரியும், மைத்ரி மூவி மேக்கர்ஸும் இணைந்து தயாரிக்கலாம் எனவும் கருதப்படுகிறது.