கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கிய இந்தோனேஷியா மீனவர்கள் எட்டு பேர் படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி பலியாகினர்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய கடலோர பகுதிகளை சக்திவாய்ந்த சூறாவளியான இல்சா தாக்கியது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த சூறாவளியில் சிக்கி அந்நாட்டு கடலோர கிராமங்கள் உருக்குலைந்தன. இந்தோனேஷியாவில் இருந்து இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 19 பேர் இந்த சூறாவளியில் சிக்கினர்.
இதில், ஒரு படகில் பயணம் செய்த ஒன்பது பேர் கடலில் மூழ்கினர். ஒருவர் மட்டும் தப்பி ஆஸ்திரேலியாவின் பெட்வெல் தீவில் கரை ஒதுங்கினார். இதேபோல், மற்றொரு படகிலிருந்து தப்பிய 10 மீனவர்கள் இதே தீவில் கரை ஒதுங்கினர். இவர்கள் 11 பேரும் கடந்த ஆறு நாட்களாக தண்ணீர், உணவின்றி தவித்த நிலையில் ஆஸ்திரேலியா கடலோர படையினரால் நேற்று மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கி இறந்த எட்டு மீனவர்களின் உடலைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement