சனா: ஏமன் நாட்டில் கூட்டநெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏமன் இஸ்லாமிய நாடு. இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் அதனையொட்டி தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயல கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம். இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஏமன் நாட்டின் போராட்டக்குழுவான ஹவுத்தி போராளிகள் குழு தங்களின் தொலைக்காட்சியில், அரசின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பறிபோனதாக செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியில் ஆங்காங்கே சடலங்கள் வரிசையாக குவித்துவைக்கப்பட்டுள்ளது காட்டப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
8 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போர்:
தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மன்சூர் ஹைதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது எமனின் அதிபராக அலி அப்துல்லா சாலே இருக்கிறார். 8 வருடங்களாக நடக்கும் இந்த உள்நாட்டுப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா அரசு செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
இவற்றுக்கிடையே ஐக்கிய அமீரக ஆதரவு பெற்ற ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். இவ்வாறு ஏமனில் அனைத்து புறங்களிலும் சண்டை நடக்கின்றது. ஏமன் உள் நாட்டுப் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
போரினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐ.நா. அமைப்புகள் அங்கே மனிதாபிமான உதவிகளை செய்துவருகின்றன. நாட்டின் 3ல் இரண்டு பங்கு மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலையில் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள் கூட பல ஆண்டுகளாக ஊதியம் சரிவர பெறாமலேயே வேலை செய்துவருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 20 கோடி மக்கள் அடிப்படை உதவிகளை எதிர்நோக்கியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.