வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
‘ கடலைமாவு’
என் ஆருயிர் தோழன் .
அவன் என்னோடு இருக்கையில் உலகம் என் கையில்! கடந்த 50 வருடங்களாக என் உயிரோடும் உணர்வோடும் கலந்திருப்பவன் அவன்.
பிறந்த குழந்தையிலிருந்தே கடலை மாவு கொண்டு தான்என்னை குளிக்க வைத்திருக்கிறார் அம்மா. (இன்றுவரை என் சருமத்தை அம்மாவைப்போல பாதுகாப்பது கடலைமாவுதான்)
நான் எந்த ஊருக்கு சென்றாலும் கடலைமாவை கையோடு எடுத்துச் செல்வேன். அதுமட்டுமா கடலைமாவு வீட்டில் இருந்தாலே வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்ற நம்பிக்கை வரும். கடலை மாவின் நறுமணம் அப்படியே நம் நாசிக்குள்சென்று நம்மைஏதோ ஒரு மாய உலகத்திற்குச் அழைத்துச் செல்லும்.
கடலைமாவு என்றாலே வாய்வு என்பது தான் பலரின் அபிப்ராயம்.
அது ‘வாய்வு ‘அல்ல ,’வாழ்வு’ என்பது என் தாழ்மையான கருத்து.
வேறு எந்த பெரிய பொருட்கள் இல்லை என்றாலும் கடலை மாவு இருந்தால் போதும் வித்தியாசமான ரெசிபிக்களை செய்து வீட்டில் உள்ளவர்களையும், விருந்தினர்களையும் அசத்தலாம். நான் கடலை மாவைக் கொண்டு செய்யும் சில எளிமையான ரெசிபிக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
*சீஸ் வெஜ் ஆம்லெட்
கடலை மாவு ஒரு கப் ,மக்காச்சோள மாவு ஒரு டேபிள் ஸ்பூன் இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவும் வெங்காயம் மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். இரண்டு துண்டுகள் சீஸை துருவவும். மாவு கலவையோடு பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் கோஸ் சிறிதளவு, வெங்காயம் ,மல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய் தேய்த்து ஒரு கரண்டி மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு தட்டால் மூடி வைக்கவும் (தீ மிதமாக எரிய வேண்டும்) ஒரு புறம் வெந்ததும் தோசையை திருப்பி போட்டு மீண்டும் சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்க சீஸ்வெஜ் ஆம்லெட் அழகாய் நம்மை பார்த்து ‘ஹாய்’ சொல்லும்.
*எல்லோருக்கும் மிகவும் பிடித்த பிரெஞ்ச்ஃப்ரை இப்போது…
உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் அலசவும். பிறகு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு கிழங்குடன் கடலை மாவு, மிளகாய் தூள் உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கி சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் தயாராக உள்ள உருளைக்கிழங்கை பொரித்தெடுத்து சுடச்சுட சாப்பிட பிரச்சனைகளுக்கு ‘பை’,’பை’சொல்லலாம்.
*கொழ கொழ வெண்டைக்காயில் சூப்பரான பக்கோடா செய்யலாமா?
வெண்டைக்காயை கழுவி நன்கு துடைத்து பொடியாக நறுக்கவும். இஞ்சி ,மிளகாய் ,கறிவேப்பிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கடலை மாவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி ,மிளகாய் கறிவேப்பிலை உப்பு சிறிதளவு நீர் சேர்த்து பிசறி வைக்கவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காய் கலவையை தூவினாற்போல் போட்டு பொரித்தெடுக்க மொறுமொறுவென்று சுவையில் வெண்டைக்காய் பக்கோடா தயார். வெங்காய சாம்பாருக்கு தோதான சைட் டிஷ் இது.
*ஸ்டஃப்டு குடைமிளகாய் சாப்பிட போலாமா?!
ஸ்டஃப்பிங் செய்ய :
குடைமிளகாய் 6 வாழைக்காய் 2 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 2 எலுமிச்சம் பழச்சாறு 3 டீஸ்பூன் கரம்மசாலா ஒரு டீஸ்பூன் மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மல்லித்தழை சிறிதளவு
கடுகு சீரகம் அரை டீஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு. மேல் மாவுக்கு:
கடலை மாவு ஒரு கப் அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன் மைதா ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு எண்ணெய் தேவையான அளவு.
வாழைக்காய்களை தோளோடு தண்ணீரில் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் தோலை நீக்கிவிட்டு உதிர்க்கவும். வெங்காயம், மிளகாய் மல்லித்தழையைப் மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மிளகாயை வதக்கி, உதிர்த்து வைத்துள்ள வாழைக்காயைச் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா ,சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மல்லித்தழையைத் தூவி இறக்கவும். கத்தியால் குடைமிளகாய் காம்பை கீறி விதைகளை நீக்கவும். இதனுள்ளே வாழைக்காய் கலவையை அடைக்கவும்.
மேல் மாவுக்கு தேவையான பொருட்களை எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து ஸ்டஃப்டு குடைமிளகாயை கரைத்த மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையில் அசத்தும் ஸ்டஃப்டு குடமிளகாய்..
இப்ப சொல்லுங்ககடலை மாவு ஒரு கப் இருந்தால் உலகத்தையேவென்று விடலாம் அல்லவா!!
உங்கள் வீட்டு சமையல் அலமாரியில் கடலைமாவுக்கு இனி தனி இடம்… ஆமாம் தானே!!!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.