திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலனை, நன்னிலம் போலீசார் கைது செய்தனர். வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தகராறு ஏற்பட்டு, அப்போது தற்கொலை செய்து கொண்டதும், அதனை அந்த இளைஞர் ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ளது மருதூர் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா, மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து நன்னிலத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி நன்னிலத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி பணிக்கு வந்த அர்ச்சனா, மதிய உணவு இடைவேளையின்போது தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு தனது ரூமிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தனது அறையில் திடீரென அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நன்னிலம் போலீஸார், நேரில் வந்து உடலைக் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதும், ரகசிய காதலன் ஒருவரால் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.
போலீசார் கூறும் போது தற்கொலை செய்து கொண்ட அர்ச்சனாவும், நாகை மாவட்டம் வடகாடு பஞ்ச நதிக்குளம் பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ்(26) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். பின்னர், சத்தியராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சத்தியராஜுக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து இருவருக்கும் போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
கடந்த 12-ம் தேதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சத்தியராஜூடன் அவர் செல்போனில் வீடியோ காலில் பேசியிருக்கிறார். அப்போது சத்தியராஜூடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த பெண் மிரட்டி கூறியுள்ளார். அதற்கு சத்தியராஜ் செத்தாலும் பரவாயில்லை என்று சரி என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் அர்ச்சனா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வதை சத்தியராஜ் வீடியோ காலில் பார்த்து ரசித்திருக்கிறார் என்றனர். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சத்தியராஜை புதன்கிழமை அன்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.