சென்னை: மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மினிமம் பட்ஜெட்டில் வாழை என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், கர்ணன் படம் வெளியான இரண்டாவது ஆண்டில் தனுஷுடன் மீண்டும் இணைவதாக மாரி செல்வராஜ் அறிவித்திருந்தார்.
இது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படம் குறித்து மாரி செல்வராஜ் மனம் திறந்துள்ளார்.
தனுஷ் – மாரிசெல்வராஜ் கூட்டணி:பரியேறும் பெருமாள் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். இதனால் மாரி செல்வராஜ் இரண்டாவதாக இயக்கிய கர்ணன் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார். 2021 ஏப்ரல் மாதம் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
தனுஷுடன் லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் நடித்த கர்ணன், உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியிருந்தது. இதனால், ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு காணப்பட்டது. கர்ணன் வெற்றிக்குப் பின்னர் உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். உதயநிதி, ஃபஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன், தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது.
இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாகவே வாழை என்ற படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜ் அறிவித்திருந்தார். இந்தப் படம் மினி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதனிடையே கர்ணன் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, இம்மாதம் 9ம் தேதி தனுஷும் மாரி செல்வராஜும் நேரில் சந்தித்தனர். அப்போது இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக அறிவித்தனர்.
கர்ணன் வெளியான அதேநாளில் தனுஷுடன் இணையும் அடுத்த படம் குறித்து மாரி செல்வராஜ் ட்வீட் செய்திருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்து மாரி செல்வராஜ் மனம் திறந்துள்ளார். அதன்படி, இந்தப் படமும் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு முக்கியமான உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப்படம் தனுஷ் கேரியரிலும் தனது கேரியரிலும் மிக முக்கியமான படமாக இருக்கும். இதனால் இப்படம் குறித்து யோசிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. நிச்சயமாக இந்தப் படம் எங்கள் இருவரையும் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு எடுத்துச் செல்லும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இதனால், தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே தாறுமாறாக எகிறிப் போயுள்ளது.
தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ம் தேதி வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.