சென்னை: நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான காவல் நிலையங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் 1,305 காவல் நிலையங்கள் இருப்பதாகவும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை பொறுத்தவரை 222 உள்ளதாக்வும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையங்களின் எண்ணிக்கை 47 என்றும் போக்குவரத்து காவல் நிலையங்களின் எண்ணிக்கை 280 எனவும் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பு கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல தமிழக காவல்துறையானது நாட்டிலேயே சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநில காவல் துறைகளில் ஒன்றாக திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் 35,239 காவல் பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியாற்றி வருவதாக கூறியுள்ள தமிழக அரசு ஒவ்வொரு தாலுகா மகளிர் காவல் நிலையத்திலும் குறைந்தது ஒரு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் 3 தலைமைக்காவலர்கள் பணியில் இருப்பதாக கூறியுள்ளது.
இண்டெலிஜன்ஸ் பிரிவு அளித்த முன் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக மாநிலம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் சட்டசபையிலும், பொதுவெளியிலும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பு கையேட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.