நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்களை ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் உலகராணி இந்த வழக்கை விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விசாரணையின்போது பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு சித்ரவதைகளை அனுபவித்தவர்களின் சார்பாக ஆஜராகிவரும், வழக்கறிஞர் மகாராஜன் இது பற்றி நம்மிடம் பேசுகையில், “சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெகடரான உலகராணி இந்த வழக்கை விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் நேர்மையான அதிகாரி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவரால் இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கும் சூழல் இருக்குமா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.
ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர் சிங் இதுவரை எந்த விசாரணையிலும் ஆஜராகவில்லை. அவர்மீது பாதிக்கப்பட்ட பலரும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அந்த வழக்கை இதுவரை விசாரித்த சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா உள்ளிட்ட யாருமே பல்வீர் சிங்கை நேரில் ஆஜராக சம்மன்கூட அனுப்பவில்லை. அவரிடம் விசாரிக்கவும் இல்லை. அதனால், சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் உலகராணி அவரை எப்படி விசாரிக்கப் போகிறார் என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.

இந்த வழக்கை தாமதப்படுத்தும் முயற்சியாகவே அடுத்தடுத்த விசாரணைகளுக்கு தமிழக அரசு மாற்றுகிறது. சப்-கலெக்டர் விசாரணையின்போதே காவல் நிலையத்திலிருந்த ஆதாரங்களைச் சேகரித்திருக்க வேண்டும். ஆனால், காவல் நிலையங்களிலிருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அங்கிருந்த ரத்தக் கறைகளைச் சேகரிக்கவில்லை. பற்களை உடைக்கப் பயன்படுத்திய கட்டிங் பிளேடு, கற்களை பாதுகாக்கவில்லை. அதனால் ஆவணங்களை அழிக்கும் வகையில் திட்டமிட்டு விசாரணையைத் தாமதிப்பதாக சந்தேகிக்கிறோம். பல்வீர் சிங்மீதான வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடைக்கும்” என்றார்.