சென்னை : நடிகர் நாகசைத்தன்யா -க்ருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் கஸ்டடி. மாநாடு படத்தின் வெற்றியை அடுத்து இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு.
எப்பொழுதும் கலகலப்பான படங்களை கொடுத்துவரும் வெங்கட் பிரபு மாநாடு என்ற டைம் லூப் அடிப்படையிலான படத்தை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நாகசைத்தன்யாவை வைத்து தமிழ், மற்றும் தெலுங்கில் கஸ்டடி என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
ஐபிஎல் ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட கஸ்டடி டீம் : நடிகராக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவங்கிய வெங்கட் பிரபு சென்னை 600 028 என்ற கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்ட படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து, அந்தப் படத்தின்மூலம் தன்னை மிகச்சிறந்த இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து சரோஜா, பிரியாணி என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த வெங்கட்பிரபு, சூர்யாவை வைத்து மாஸ், அஜித்தை வைத்து மங்காத்தா, கார்த்தியை வைத்து பிரியாணி மற்றும் சிம்புவை வைத்து மாநாடு ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
குறிப்பாக அஜித்தை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படம் இவருக்கு ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தது. தொடர்ந்து சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுத்துள்ளது. டைம் லூப் அடிப்படையில் உருவான இந்தப் படம் சிறிது பிசகியிருந்தாலும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும். ஆனால் மிகுந்த கவனத்துடன் இந்தக் கதையை அணுகினார் வெங்கட் பிரபு. படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.
இதையடுத்து தற்போது நாக சைத்தன்யா மற்றும் க்ருத்தி ஷெட்டி காம்பினேஷனில் கஸ்டடி படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். வரும் மே மாதம் 12ம் தேதி படம் சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். படத்தின் பாடல், டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் ஐபிஎல் சிறப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் சிஎஸ்கே ஜெர்சியை போட்டுக் கொண்டு வெங்கட்பிரபுவும் எஸ்ஆர்ஹெச் ஜெர்சியை போட்டுக் கொண்டு நாக சைத்தன்யாவும் வர, மேட்சை பார்ப்பதற்கு எந்த ஜெர்சியில் போவது என்பது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதையடுத்து எதை வைத்து சமாதானமாக போவது என்பது குறித்து அவர்களது வாக்குவாதம் தொடர்கிறது. கலகலப்பாக தொடரும் இந்த வாக்குவாதத்தில் பஞ்சாயத்து செய்து வைக்க வழக்கம் போல பிரேம்ஜி வருகிறார். அவர் வந்து, கஸ்டடி படம், CSK Vs SRH கிடையாது என்றும் CSK & SRH என்றும் தீர்ப்பு சொல்கிறார். இதனால் இருவரும் சமாதானமடைகின்றனர். கைத்தட்டி ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால் கடைசியில் என்ன இருந்தாலும் சிஎஸ்கே தான் வின் செய்யும் என்று வெங்கட் பிரபு சொல்ல அவரது கழுத்தை நெரிக்க ஆயத்தமாகிறார் நாக சைத்தன்யா.
இந்நிலையில் இந்த சண்டை நாளை மேட்சிலும் தொடரும் என்று நாக சைத்தன்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எப்போதும் வித்தியாசமாக சிந்திப்பவர் வெங்கட்பிரபு. அவருக்கு கிரிக்கெட்டிலும் அதிக ஆர்வம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதனால்தான் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை மையமாக வைத்து சென்னை 600 028 படத்தை இரண்டு பாகங்களாக கொடுத்தார். இந்நிலையில் தற்போது ரசிகர்களை கட்டிப் போட்டுள்ள ஐபிஎல்லை மையமாக வைத்து தன்னுடைய படத்தின் பிரமோஷனை மேற்கொண்டுள்ளார்.