இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையில் 2020ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் செவிலியர் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அதன்படி, செவிலியர் தொழில் வாய்ப்புக்கள் கிடைத்த, 15 பேர் அடங்கிய 51வது குழுவிற்கு விமான டிக்கெட்டுக்கள் வழங்கும் நிகழ்வு (20.04.2023) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.
இந்த குழுவில் 14 பெண்களும் ஒரு ஆணும் உள்ளனர், மேலும் அவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளனர்.
அத்துடன், 2022 ஏப்ரல் 28 முதல் இதுவரையிலும், 302 இலங்கையர்கள் செவிலியர் தொழிலுக்காக இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் மாத்திரமே இஸ்ரேலில் செவிலியர்; தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க முடியும். எனவே, இஸ்ரேலில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள, பணம் அல்லது கடவுச் சீட்டை வெளியாட்களுக்கு வழங்குவதை தவிர்த்துக் கnhள்ளுமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.