புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் காப்பீட்டு திட்டத்தில் ரிலையன்ஸ்’ காப்பீடு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலமாக இருந்த போது, அதன் கவர்னராக 2018 – 19ல் இருந்தவர் சத்யபால் மாலிக்; ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஜம்மு – காஷ்மீர் கவர்னராக நான் இருந்த போது, காஷ்மீரில் நீர்மின் நிலைய திட்டம், அரசு ஊழியர்கள் காப்பீட்டு திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கான கோப்புகளில் அனுமதி அளித்து கையெழுத்து போட, எனக்கு 300 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க, இரண்டு பேர் முன் வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்.
இது பற்றி சி.பி.ஐ., விசாரணைக்கு, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் பரிந்துரைத்தது. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் ஜம்மு – காஷ்மீர் அரசு ஊழியர்களின் சுகாதார காப்பீடு திட்ட ஒப்பந்தம், 2017 – 18ம் ஆண்டில், ‘ரிலையன்ஸ்’ காப்பீடு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதும், இதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சத்யபால் மாலிக் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் கவர்னராக இருந்த போது ஜம்மு-காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் ஒப்பந்த பணிகளுக்கு அனுமதி தர லஞ்சம் கொடுக்க ரிலையன்ஸ் காப்பீட்டு நிறுவனம் முன் வந்தது. இது குறித்து பிரதமரிடம் நேரிடையாக தெரவித்துவிட்டேன். இந்நிலையில் காப்பீட்டு ஒப்பந்தம் தொடர்பாக எனக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி வரும் 27,28-ம் ஆகிய தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது என்றார்.
இதேபோல், இரு நீர்மின் திட்ட பணிகள் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதும், சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேடுகளை கண்டு கொள்ளாமல், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவே, சத்யபால் மாலிக்குக்கு ரூ. 300 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததும் தெரிய வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement