எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுடன் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.அதில் ஒன்று பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.