ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தண்டவாளத்தில் நின்ற மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாடு விழுந்து தண்டவாளம் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவில் அதி நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மணிக்கு 160 கி.மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டவை இந்த வந்தே பாரத் ரயில்கள்.
இருந்தாலும் இந்தியாவில் உள்ள ரயில் வழித்தடங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் கட்டமைப்புகள் காரணமாக அந்த வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. அதிகபட்சமாக 130 கி.மீட்டர் வேகம் வரை இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கின்றன. இது ஒருபக்கம் என்றால் வழித்தடங்களில் மாடு மீது மோதி வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மும்பை – காந்திநகர் வழித்தடத்தில் நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் சேவை தொடங்கிய சில நாட்களிலேயே மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இப்படி வந்தே பாரத் ரயில்கள் அடிக்கடி மாடு மீது மோதும் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் வந்தே பாரத் ரயில்களும் சேதம் அடைவதோடு, கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவமும் நடைபெறுகிறது. இதனால், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டி வேலிகள் அமைக்கவும் மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இத்தகைய சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் பகுதியில், மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியது. ரயில் மோதிய வேகத்தில் மாடு தூக்கி வீசப்பட்டது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த நபர் மீது விழுந்துள்ளது. இதில் அந்த நபரும் உயிரிழந்து உள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: –
ராஜஸ்தானின் அல்வார் அருகே காலி மோரி கேட் பகுதி அருகே இன்று காலை 8.30 மணியளவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே வந்த மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியது. ரயில் மோதிய வேகத்தில் சுமார் 30 அடி தூரம் மாடு தூக்கி வீசப்பட்டுள்ளது. அப்போது தண்டவாளம் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்த ஷிவ்தயாள் என்பவர் மீது மாடு விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த ஷிவ்தயாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசர் ஷிவ்டியால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தண்டவாளம் அருகே சிறுநீர் கழிக்க சென்ற போது, ரயில் மோதியதால் தூக்கி வீசப்பட்ட மாடு விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .