ஜம்மு லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதில் தனது பள்ளியின் நிலையை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதையடுத்து தற்போது அந்த பள்ளியை சீர்ப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“மோடி ஜி, நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என் பெயர் சீரத் நாஸ். நான் லோஹாய்-மல்ஹர் கிராமத்தில் இருக்கிறேன். நான் அரசு பள்ளியில் படித்து வருகிறேன்” என இந்த வீடியோ தொடங்குகிறது. 2 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோவில் தங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
“எங்களுக்கு சிறப்பான பள்ளியை கட்டிக் கொடுக்கவும். நாங்கள் தரையில் தான் அமர்கிறோம். இங்கு பெஞ்ச் கூட இல்லை. எங்களது சீருடை அழுக்காகிறது. அதனால் அம்மா திட்டுகிறார்” என சீரத் நாஸ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.
இந்தச் சூழலில் ஜம்முவின் பள்ளிக் கல்வி இயக்குனர் ரவி சங்கர் சர்மா அந்த பள்ளிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். “பள்ளியை நவீன முறையில் தரம் உயர்த்த சுமார் 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதி சார்ந்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருந்தது. தற்போது அது தீர்ந்துள்ளது. பணிகள் தொடங்கி உள்ளன. ஜம்முவில் சுமார் 1000 மழலையர் பள்ளிகள் அமைய உள்ளன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி வீடியோ ஒன்றை சீரத் வெளியிட்டுள்ளார். அவருக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது விருப்பமாம்.