சென்னை வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவா (45). பிளம்பராக வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி சரிதா (37). இவர் தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார். இந்தத் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்படும். வழக்கம் போல கடந்த 19-ம் தேதி ஜீவாவுக்கும் சரிதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த ஜீவா, வீட்டிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து சரிதாவின் தலையில் ஒங்கி அடித்திருக்கிறார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. அதன் காரணமாக மயங்கி விழுந்த சரிதாவின் மூச்சு சிறிது நேரத்தில் நின்றுவிட்டது.
அதனால் அதிர்ச்சியடைந்த ஜீவா, மனைவியின் சடலத்தை வீட்டிலிருந்த பெட் சீட் மற்றும் பாயில் சுற்றி மறைத்து படுக்கையறையில் மறைத்து வைத்திருக்கிறார். பின்னர், அந்தச் சடலத்துடன் இரவில் தூங்கிய ஜீவா, காலையில் கண் விழித்து எதுவும் நடக்காதது போல அன்றாட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சரிதாவுடன் வேலைப்பார்க்கும் அவரின் தோழி, ஏன் அக்கா இன்னும் வேலைக்கு வரவில்லை என்று ஜீவாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஜீவா, காலையிலேயே அவள் வேலைக்குச் சென்றுவிட்டாள் என பதிலளித்திருக்கிறார். ஆனால் சரிதா வேலைக்கும் வரவில்லை எனத் தெரிந்ததும் ஜீவாவிடம் சரிதாவின் தோழிகள், குடும்பத்தினர் விசாரித்திருக்கிறார்கள். அப்போது ஜீவா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து சரிதாவின் வீட்டுக்குள் சென்று அவரின் குடும்பத்தினர் தோழிகள் பார்த்திருக்கிறார்கள். அப்போது படுக்கையறையில் ரத்த துளிகள் சிதறி கிடந்தன. மேலும் அந்த அறையை முழுவதும் சோதனை செய்தபோது பாய் மற்றும் பெட் ஷீட்டில் சுற்றப்பட்ட நிலையில் சரிதாவின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். உடனடியாக வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைடுத்து ஜீவாவைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து வியாசர்பாடி போலீஸார், “ஜீவாவுக்கும், சரிதாவுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. ஜீவாவின் சில செயல்பாடுகள் சரிதாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் கடந்த சில மாதங்களாக சரிதா, தன்னுடைய பெற்றோர் குடியிருக்கும் கொருக்குப்பேட்டையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். வாரத்தில் ஒருநாள் மட்டும் கணவரைப் பார்க்க சரிதா வருவதுண்டு. சம்பவத்தன்றும் கணவரைப் பார்க்க சரிதா வியாசர்பாடி வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அப்போது கணவனும், மனைவியும் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். அதன்பிறகுதான் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலைசெய்த ஜீவா, அந்தச் சடலத்துடன் இரவில் தூங்கியிருக்கிறார். பின்னர் சடலத்தை மறைத்து வைத்திருக்கிறார். கொலைசெய்யப்பட்ட சரிதா அரைநிர்வாணமாகவே கிடந்தார். விசாரணைக்குப்பிறகு ஜீவாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.