விஜய்சேதுபதிக்கு மாற்றாக மதுர் மிட்டலை தேர்வு செய்தது ஏன்? – 800 பட இயக்குனர் தகவல்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் சச்சின், கபில்தேவ், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. அதேபோல இலங்கையைச் சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இயக்குனர் ஸ்ரீபதி இயக்கத்தில் 800 என்கிற பெயரில் உருவாகும் அந்த படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டு பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் சில அரசியல் எதிர்ப்புகள் காரணமாக விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லியனர் பட நடிகரான மதுர் மிட்டல் என்பவர் நடிப்பதாக புதிய பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இந்த கதாபாத்திரத்திற்கு மதுர் மிட்டலை தேர்வு செய்ய காரணம் என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் ஸ்ரீபதி.

“விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்காதது வருத்தம் தான். அதன் காரணமாக அப்படியே ஸ்தம்பித்து நின்று விடாமல் இந்த கதையை எப்படியும் படமாக்கியே தீர வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது. மதுர் மிட்டலுக்கு முத்தையா முரளிதரனின் உருவ ஒற்றுமை ஓரளவுக்கு இருந்ததால் அவரை தேர்வு செய்தேன். இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை இவரால் திரையில் கொண்டு வந்து விட முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அவருக்கு வைத்த ஆடிசன் டெஸ்ட் வீடியோவை போட்டு பார்த்தபோது நிச்சயமாக முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தமான நபராக இருப்பார் என்கிற நம்பிக்கை பிறந்தது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.