கொச்சி : நடிகர் மம்முட்டியின் தாயார் ஃபாத்திமா வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார் .அவருக்கு வயது 93.
வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மெகா ஸ்டார் மம்முட்டி : மம்முட்டி என்ற பெயரைக் கேட்டதும் நமக்கு நினைவிற்கு வருவது ‘நட்புனா என்னனு தெரியுமா’ என்ற வசனம் தான். 1991ம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் இந்த வசனம் இடம் பெற்று இருக்கும். ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த இந்த திரைப்படம் இன்று வரை நட்பிற்கு இலக்கணமாக சொல்லப்படும் படமாக உள்ளது. தளபதி படத்திற்கு முன்பே மௌனம் சம்மதம், அழகன் படங்களில் நடித்து பரீச்சியமான மம்முட்டிக்கு தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பெற்றுத்தந்த படம் தான் தளபதி.
400க்கும் மேற்பட்ட படங்களில் : மலையாளம், தெலுங்கு, தமிழ்,கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள மம்முட்டியை கேரள ரசிகர்கள் மெகா ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர். திரையுலகில் 50 ஆண்டுகளாக வெற்றிக்கொடியுடன் ஆட்சி செய்து வரும் மம்முட்டி 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மம்முட்டி ஜோதிகாவுடன் இணைந்து ‘காதல் தி கோர்’என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இன்று காலை உயிரிழந்தார் : இந்நிலையில், மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை உயிரிழந்தார். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தார். மம்முட்டியின் தாயாரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறுதிச்சடங்கு : பாத்திமா இஸ்மாயிலின் இறுதிச்சடங்கு கோட்டயம் செம்புவில் உள்ள அவரது சொந்த ஊரில் முஸ்லிம் ஜமாத் மசூதியில் மாலை 3 மணிக்கு அளவில் நடைபெற உள்ளது. மம்முட்டியின் தாயார் பாத்திமா தனது மூத்த மகன் மம்முட்டி மற்றும் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோரின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.