திருமணத்திற்கு பின் கணவர், குழந்தைகள் என குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்த நயன்தாரா, மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். இப்போது அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
சமீபத்தில் அவர் கமிட் ஆகியிருக்கும் ‘லேடிசூப்பர் ஸ்டார் 75’ (தற்காலிகமான தலைப்பு என்கிறார்கள்) அவரது 75வது படமாகும். அவரது 81வது படத்தை துரை.செந்தில்குமார் இயக்குகிறார்.இப்படி நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களின் லைன்-அப்களை விசாரித்தேன்.

”நயன்தாராவின் படங்களை விக்னேஷ்சிவன் தான் இப்போது தேர்வு செய்கிறார். முதல் சுற்றில் அவர் கதை கேட்டு முடித்த பின், அடுத்த சுற்றில் நயன்தாராவே கதைகளை கேட்கிறார். ”ஹீரோ யார்? சின்ன ஹீரோவா? ஹீரோயின் சென்ட்ரிக்கா என்பதையெல்லாம அவர் பார்ப்பதில்லை. சிம்பிள் பாலிஸிதான். அவருக்கு கதை பிடித்திருந்தால் போதும், அதில் என்ன விதத்தில் இருக்கோம், எப்படிப் பொருந்திப்போகிறோம் என்பதை மட்டும்தான் அவர் பார்க்கிறார்.”

என்கிறார் அவரது இயக்குநர் ஒருவர்.
இப்போது ‘இறைவன்’, ‘ஜவான்’ படங்களை முடித்துக் கொடுத்து விட்டார். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், விஜய்சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘ஜவான்’ படப்பின் போதுதான் நயனின் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம். ‘ஜவான்’ படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் மும்பையில் நடந்து வருகிறது. அதைப்போல, ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அஹமதின் இயக்கத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்திருக்கும் ‘இறைவன்’ படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

அடுத்து ராஜ்கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திலும் நயன் நடிக்கவிருக்கிறார். ‘மேயாத மான்’ ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படம், மலையாளத்தில் நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்ஷன் டிராமா’வுக்கு பிறகு ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ மற்றும் மாதவன் நடிப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் ‘டெஸ்ட்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 81வது படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. இதில் ஷங்கரின் உதவியாளர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’ நயனின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது எனச் சொல்லியிருக்கிறார்கள். தவிர மணிரத்னம் இயக்கத்தில் கமல் இணையும் படத்திலும் நயன்தாராவிடம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.