புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 67,556 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 4 சதவீதம் அதிகம்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தற்போது நாடு முழுவதும் கோவிட் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 67,556 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 877 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி 10,765 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதன்படி, இதுவரை கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 021 உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 220.66 கோடிக்கும் அதிகமான டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களை மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழகம், ஹரியாணா ஆகிய 8 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ”கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேநேரத்தில் பீதி அடையத் தேவையில்லை.
கரோனா தொற்று உறுதியான மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். இன்ஃப்ளூயன்சா வகை நோய்கள் மற்றும் SARI நோய்கள் எந்த அளவுக்கு பரவுகின்றன என்பதையும் கண்காணியுங்கள்.
மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள். மருத்துவக் கட்டமைப்பு போதுமான அளவு உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். தடுப்பூசி போடாமல் இருப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். கூட்டம் கூடாமல் இருப்பது, காற்றோட்ட வசதியை உறுதிப்படுத்துவது, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்புக்கான செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்திருந்தார்.