லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரிகளை கட்ட ஏற்கனவே பாஜக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் இந்த பணிகளை விரைந்து முடிக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த துறைகளுக்கு முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்படி அதிக நிதி ஒதுக்கப்பட்ட துறைகளில் சுகாதாரத்துறையும் ஒன்று. அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, உபகரணங்கள் இல்லை என்கிற புகார்கள் உத்தரப் பிரதேசத்தில் அடிக்கடி மேலெழுகின்றன. ஆனால் சில மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளே இல்லாமல் இருக்கின்றன. எனவே இந்த நிலையை மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியை கொண்டு புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்படும் என்றும், ஏற்கனவே உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மேலும் விரிவுப்படுத்தப்படும் எனவும் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு மாவட்டம் ஒரு மருத்துவக் கல்லூரி என்பதுதான் இதன் இலக்காக இருக்கிறது. இந்த பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை 14 புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் 60 சதவிகிதம் நிறைவந்துள்ளன. இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறத்தி வருகின்றனர். எனவே இதற்கான உத்தரவை யோகி ஆத்தியநாத் பிறப்பித்துள்ளார்.
உத்தரவின்படி புதிய கட்டிடங்களுக்காக ஏற்கனவே அனுமதி வாங்கப்பட கட்டிடங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். அதேபோல விரிவாக்கம் தொடர்பாக அனுமதி பெறப்பட்ட கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக ஒரு மாதம் வரை கால நீட்டிப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எப்படியாயினும் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மாநிலத்தின் மருத்துவமனைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்திருக்கிறது. எனவே மீண்டும் ஒரு கொரோனா அலை உருவானால் அதனை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் மருத்துவமனைகள் விரிவாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன. குஷிநகர், கௌசாம்பி, சுல்தான்பூர், கான்பூர் தேஹாத், லலித்பூர், பிலிபித், அவுரையா, சோன்பத்ரா, லக்னோ, புலந்த்ஷாஹர், கோண்டா, பிஜ்னோர், சண்டௌலி மற்றும் லக்கிம்பூர் கெரி ஆகிய இடங்களில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
யோகி ஆதித்யநாத்தின் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவமனைகளின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதனை மறைப்பதற்காகவே தற்போது புதிய திட்டங்கள் என்கிற பெயரில் கட்டுமானங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சிகள் குற்றசம்சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.