மீண்டும் குழப்புகிறதா தேர்தல் ஆணையம்? கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் இருவரது வேட்பு மனுக்களை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தற்போது எழுச்சியோடு இருக்கிறார்கள் – எடப்பாடி

அதிமுக உட்கட்சி மோதலில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த போதும், தேர்தல் ஆணையத்தில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் படி கட்சி விதிகள் மாற்றப்பட்டதும், பொதுச் செயலாளராக

தேர்ந்தெடுக்கப்பட்டதும் அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் ஏப்ரல் 20ஆம் தேதி தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட கோரிய வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது.

அணி சார்பில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். புலிகேசி நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னம் அன்பரசனுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இரு தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனுவை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.