கொச்சி: பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்கும் நோக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த கேரளாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் நாளை நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், கேரளாவுக்கு வரும் பிரதமர் மோடியை, தற்கொலைப் படை தாக்குதல் வாயிலாக கொல்லப் போவதாக, மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரனுக்கு சமீபத்தில் கடிதம் வந்தது.
இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்தக் கடிதம், கொச்சியைச் சேர்ந்த ஜானி என்பவர் பெயரில், அவரது முகவரி, ‘மொபைல்போன்’ எண்ணுடன் அனுப்பப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தனக்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு, இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணையின்போது ஜானி தெரிவித்தார்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஜானியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சேவியர் என்பவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையே சில விஷயத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது.
ஜானியை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த மிரட்டல் கடிதத்தை எழுதியதாக சேவியர், விசாரணையில் தெரிவித்தார். அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement