மதுரை: மதுரையில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், அடுத்தடுத்து பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
ஒவ்வொரு நாளும் கோடை வெயிலின் தாக்கம், மக்களை வெளியில் போகவிடாமல் அச்சம் ஏற்படுத்தும் விதமாக வாட்டுகிறது. அக்னி நட்த்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் இந்த வெயிலைக் கண்டு பகலில் எங்காவது ஒதுங்கவேண்டும் என தோன்றுகிறது. வயதானோர் உள்ளிட்ட சிலர் வெளியில் செல்வதையே தவிர்க்கின்றனர்.
இந்த கடும் வெயிலில் இருந்து சற்று தப்பிக்கும் விதமாக ஏற்கனவே 2 நாளுக்கு முன் திடீர் கோடை மழை மதுரையில் பல்வேறு இடங்களில் பெய்தது. இதைத்தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு மேல் மேக கூட்டங்கள் திரண்டு திடீரென மழை கொட்டியது. மதுரை நகர், புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சிறிது நேரம் கனமழை பெய்தது.
ஒருசில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. ஓரிரு நாள் இடைவேளைவிட்டு பெய்த கோடை மழை, வெயிலின் பாதிப்பில் இருந்து மக்களை குளிர்விக்கும் வகையில் இருந்ததால் மதுரை மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.