Aadhavan :சூர்யாவோட ஆதவன் கதையை யார் எழுதினாங்க.. யாருக்காக எழுதினாங்க தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா, நயன்தாரா, சரோஜாதேவி மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியாகி சூப்பர்ஹிட்டடித்த படம் ஆதவன்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தின் கதையை பிரபல இயக்குநர் ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆதவன் கதையை எழுதிய பிரபல இயக்குநர் : நடிகர் சூர்யா, நயன்தாரா, சரோஜாதேவி, வடிவேலு, ரமேஷ் கண்ணா என நட்சத்திரப்பட்டாளமே நடித்து கடந்த 2009ம் ஆண்டில் வெளியான படம் ஆதவன். இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதையை படத்தில் நடித்திருந்த ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார். கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தில் கூட்டணி அமைத்திருந்த நிலையில், முன்னதாக கேஎஸ் ரவிக்குமார், தன்னுடைய படத்திற்காக கதை தேடிக் கொண்டிருப்பதாக ரமேஷ் கண்ணாவிற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து தான் எழுதியிருந்த கதையை அவருக்காக ரமேஷ் கண்ணா கொடுத்துள்ளார். இந்தக் கதையை கேட்டவுடன் கேஎஸ் ரவிக்குமாருக்கு பிடித்துப்போக உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம். தொடர்ந்து சூர்யா, உதயநிதிக்கும் இந்தக் கதையை சொல்ல, அவர்களும் உடனடியாக ஓகே சொல்ல, உடனடியாக சூட்டிங் போகலாம் என்று அவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தக் கதையை அவர் முதலில் யாருக்காக எழுதினார் தெரியுமா?

நடிகர் விஜயகாந்திற்காகத்தான் ரமேஷ் கண்ணா இந்தக் கதையை முதலில் எழுதினாராம். இதன்பின்பே கேஎஸ் ரவிக்குமாருக்கு இந்தக் கதையை கொடுத்துள்ளார் ரமேஷ் கண்ணா. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கேரளாவிலும் இந்தப் படம் அதிகமான வரவேற்பை பெற்றது. முதன்முதலில் இந்தப் படத்தின் கேரள உரிமைதான் கோடிகளை தாண்டியது.

Director Ramesh kanna writes story of Aadhavan movie not for Surya

இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அவரை வடிவேலு கலாய்ப்பதாகவும் காட்சிகள் இந்தப் படத்தில் அமைந்திருக்கும். இந்தக் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வாராயோ வாராயோ, ஹசிலி பிசிலி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை மாயம் செய்தது. நயன்தாராவும் ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சிறப்பான உடலமைப்புடன் ரசிகர்களை கொள்ளை கொண்டிருந்தார்.

இத்தனை நட்சத்திரப் பட்டாளங்களை கட்டி மேய்ப்பது கேஎஸ் ரவிக்குமாருக்கு கைவந்த கலையாகவே உள்ளது. இந்தப் படத்திலும் அதை சிறப்பாகவே செய்திருந்தார். அதேபோல இந்தப் படத்தை மிகச்சிறந்த வெற்றிப்படமாக அவர் கொடுத்திருந்தார். சூர்யாவிற்கும் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக இந்தப் படமும் அமைந்தது. இப்படிப்பட்ட கதையை தான் விஜயகாந்திற்காக எழுதியதாக தற்போது ஒரு பேட்டியில் ரமேஷ் கண்ணா வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.