சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா ஒருவரின் காலில் விழுந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராதான் இப்போது நடிகைகளில் நம்பர் 1. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தை அட்லீ இயக்கிவருகிறார். நயன்தாராவுக்கு அது முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நயனின் காதல்: நயன்தாரா நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் பல வருடங்களாக காதலித்து லிவிங் டூ கெதரில் வசித்துவந்தனர். இதனயடுத்து எப்போது இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்குரிய சமிக்ஞையை கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கொடுக்காமல் இருந்தனர் இரண்டு பேரும்
திருமணம்: இந்தச் சூழலில் கடந்த வருடம் ஜுன் மாதம் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் வந்திருந்தனர். மிக பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம் அப்போது தலைப்பு செய்தியாக இருந்தது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர்.
குழந்தைகள்: திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் எதிலும் பிரச்னைகளை சந்திக்கும் நயனுக்கு வாடகை தாய் விவகாரமும் பிரச்னையை கிளப்பியது. இருப்பினும் அவர்கள் எந்த விதியையும் மீறவில்லை; 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்டனர் என தெரியவந்ததை அடுத்து அந்த விவகாரம் ஓய்ந்தது. ஒரு மகனுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும், மற்றொரு மகனுக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
தவிர்த்த நயன்தாரா: நயன்தாரா இப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பதையோ இல்லை படத்தின் புரோமோஷனுக்கு வருவதையோ தவிர்த்துவருகிறார். படத்தின் புரோமோஷனுக்கு வருவதை அவர் தவிர்ப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் பத்திரிகையாளர்களை அவர் தவிர்ப்பதற்கு காரணம், நயன் சில பிரச்னைகளை சந்தித்தபோது பல பத்திரிகைகள் தங்கள் இஷ்டத்துக்கு எழுதியதால்தான் இப்போதும் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது.
சிம்புவுடனான காதல்: நயன்தாராவும் சிம்புவும் காதலித்துவந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். அந்த சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பிறகுதான் பத்திரிகையாளர்களை சந்திப்பதை நயன் முதல்முதலாக தவிர்த்தார். அப்படிப்பட்ட சமயத்தில் அவரை பற்றிய செய்திகளும் பெரிதாக வராமல் இருந்தனவாம்.
காலில் விழுந்த நயன்: அப்படிப்பட்ட நேரத்தில் ஒரே ஒரு மூத்த பத்திரிகையாளர் மட்டும் நயன்தாராவின் சினிமா வாழ்வு குறித்து கட்டுரை ஒன்றை சிறப்பாக எழுதியிருந்தாராம். நாட்கள் செல்ல செல்ல பிரபுதேவாவுடன் காதல், பிரிவு என மீண்டும் பரபரப்பு செய்தியானார் நயன். ஒருவழியாக சில பிரச்னைகள் முடிந்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்தாராம் நயன். அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு மூத்த பத்திரிகையாளரும் வந்திருந்தாராம்.
அவரைப் பார்த்த நயன்தாரா உடனடியாக அவரிடம் சென்று நீங்கள் எழுதிய அந்த கட்டுரை எனது சினிமா வாழ்க்கையை மேம்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என கூறி காலில் விழுந்து வணங்கினாராம். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.