அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வில் மூன்றாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. ஒபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் குரு கிருஷ்ண குமார் ஆகியோர் இரண்டு நாட்கள் வாதங்களை முன்வைத்திருந்த நிலையில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி இன்று வாதிட்டார். இதையடுத்து, மனோஜ் பாண்டியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

ஒபிஎஸ் அணி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி. எஸ். வைத்தியநாதன் ஆஜராகி, “பொதுச் செயலாளர் நடவடிக்கைகள் பொதுக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என விதி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களிலும் இதே விதிதான் பின்பற்றப்பட்டது. அந்த அடிப்படை கட்டமைப்பு தற்போது முழுவதும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களே உச்ச நீதிமன்றத்திலும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடி 50 மணி நேரத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். ஒட்டுமொத்த அடிப்படை தொண்டர்களின் ஒருமித்த குரலாகத்தான் பொதுகுழுவை கருத வேண்டும்” என்று அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , வாதங்கள் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பில்லை. எனவே, வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.

அப்போது ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, “வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதால் உறுப்பினர் சேர்க்கை நீக்கம் ஆகியவற்றில் தங்கள் தரப்புக்கு எதிராக முடிவெடுக்கவோ அல்லது பாதிப்போ ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

அதிமுக தரப்பில், “முந்தைய உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான எந்தவித முரணான உதாரணமும் இல்லாத நிலையில், இதுபோன்ற கோரிக்கைக்கு அவசியம் இல்லை.இது அவர்களின் அனுமானம் அல்லது அச்சத்தின் அடிப்படையில் வைக்கப்படும் கோரிக்கை” என்றார்.

அப்போது நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்த பிறகு எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காடி வழக்கின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.