தேனி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைப் பயன்படுத்தி, கரூரிலிருந்து சிலர் மிரட்டல்விடுவதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டித்து தேனி கருவேல் நாயக்கன்பட்டியிலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்றைய தினம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாகி மோகனிடம் பேசினோம். “அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைச் சொல்லி டாஸ்மாக் கடைகளில் விற்பனைத் தொகையில், சதவிகித அடிப்படையில் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அப்படி பணம் கொடுக்காத கடைகளை அடைக்கச் சொல்லி, அமைச்சரின் பெயரைக் கூறி வடிவேல், சதீஷ் உள்ளிட்ட சிலர் மிரட்டுகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக் கட்டமாக டாஸ்மாக் கடைகளை அடைத்துவிட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போகிறோம்.
தேனி மாவட்டத்தில் 93 கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளை கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் 1.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் நிர்வாகத்தை மிரட்டுகின்றனர். பாட்டிலுக்கு ஒரு ரூபாய், விற்பனையில் 30 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். டாஸ்மாக் ஆடிட்டரிடம்கூட பணம் வசூல் செய்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்களை மிரட்டுகின்றனர். கடந்த வியாழக்கிழமைகூட தேனி, பூதிபுரத்தில் 2 கடைகளை அடைக்கச் செய்தனர். அதிகாரிகள், `எழுத்துபூர்வமாக அவர்கள் எங்களிடம் அணுகுவது இல்லை. சென்னையிலிருந்து கூறுகின்றனர். தலைமையிலிருந்து கூறுகின்றனர்’ என்கின்றனர்.

இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் மனு அளித்திருக்கிறோம். கடைக்கு 6 பேர் வரை, இன்று உள்ளிருப்புப் போராட்டம் செய்தோம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, `இனிமேல் தொந்தரவு இருக்காது’ என உறுதியளித்தனர். அதனால் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டிருக்கிறோம்” என்றார்.