உ.பி மாநிலத்தை சேர்ந்தவர் தீப்தி. இவர் பைக் பாட் மோசடியில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர். நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த மோசடி தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை, பொருளதாரக் குற்றப்பிரிவு என பல புலனாய்வு அமைப்புகள் இந்த மோசடி பற்றி விசாரித்து வருகின்றன. ரூ.4,500 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.அதேநேரம் சிபிஐ விசாரணையில் 15,000 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் 40 வயதான பெண் தீப்தி பாஹல் மீது 2019ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளார்.
தீப்தியின் கணவர் சஞ்சய் பாட்டி கார்விட், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். முன்னதாக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சஞ்சய் பாடி தனது நிறுவனம் மூலம் ‘பைக் பாட் – பைக் டாக்ஸி’ திட்டத்தை அறிவித்தார். அப்போது, தன் மனைவி தீப்தி பாஹலை இந்த நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக சஞ்சய் பாட்டி நியமித்தார்.
சஞ்சய் பாட்டியுடன் திருமணம் ஆவதற்கு முன் பாக்பத்தில் உள்ள கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவர் எம்ஏ மற்றும் பிஎச்டி பட்டம் பெற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
2017ஆம் ஆண்டு கார்விட் நிறுவனத்தின் பெயரில் வெளியான ‘பைக் பாட் பைக் டாக்சி’ திட்டத்தில், பைக் டாக்ஸியாக பயன்படுத்தப்படும் பைக்குகள் மீது முதலீட்டாளர்கள் பணம் செலுத்த முதலீடு செய்ய வேண்டும் எனவும் அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
ஒவ்வொரு முதலீட்டாளரும் ஒரு பைக்கிற்கு ரூ.62,100 செலுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.17 லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் தங்கள் விரும்பம் போல ஒன்றுக்கு மேற்பட்ட எத்தனை பைக்குகளிலும் முதலீடு செய்யலாம் எனவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தீப்தியைப் பிடித்துக்க கொடுப்பவருக்கு ரூ.50,000 பரிசு வழங்குவதாக 2020 ஆம் ஆண்டு பொருளாதாரக் குற்றப்பிரிவு அறிவித்தது. மார்ச் 2021 இல், லோனியில் உள்ள அவரது இல்லம் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த ஊழல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து உத்தரவு பிறப்பித்தது. தீப்தி நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருப்பதால் தீப்தி மற்றும் மற்றொரு முக்கியக் குற்றவாளியான பூதேவ் சிங் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
நொய்டாவில் பதிவு செய்யப்பட்ட 118 வழக்குகளிலும் தீப்தியின் பெயரில் குற்றச்சாட்டு உள்ளது. நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட வழக்குகளிலும் தீப்தியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பணமோசடிக்கு துணைபோன 31 பேர் மற்றும் 13 நிறுவனங்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இருக்கின்றன. இதுவரை, கார்விட் இன்னோவேட்டர்ஸ் நிறுனவத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர், ஃபார்ச்சூனர் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.216 கோடி மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ விசாரணையில் சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்கள் இந்த பைக் பாட் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.