உயிர் பறித்த கேன்சர்.. இந்தியாவை நேசித்த பாகிஸ்தானி! இஸ்லாமிய விமர்சகர் – யார் இந்த தாரிக் பத்தாஹ்?

ஒட்டாவா: கனடாவை சேர்ந்த பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தாரிக் பத்தாஹ் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலமானார். 73 வயதான தாரிக் பத்தாஹ் யார்? சர்வதேச அளவில் அவரது மரணம் பேசப்படுவது ஏன்? விரிவாக பார்ப்போம்.

பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர் தாரிக் பத்தாஹ். கம்யூனிச கொள்கையின் மீது தீவிர பிடிப்பு கொண்ட இவர், கடந்த 1960கள், 1970 களின் தொடக்க காலத்தில் கம்யூனிஸ மாணவர் இயக்கங்களில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். பின்னர் பத்திரிகையாளராக தன்னுடைய பணியை அவர் தொடங்கினார்.

பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் அதன் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர் தாரிக் பத்தாஹ். அதேபோல் பாகிஸ்தான் அரசாங்கத்தையும் காட்டமாக விமர்சித்து எழுதி வந்தார் தாரிக் பத்தாஹ். இதனால் அந்நாட்டு அரசின் கோபத்துக்கு ஆளானார். பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்து வந்த அந்த காலகட்டங்களில் 2 முறை சிறையிலும் அடைக்கப்பட்டு இருந்தார்.

குறிப்பாக கடந்த 1977 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ ஜெனராக இருந்த ஜியாவுல் ஹக், பத்திரிகையாளர் தாரிக் பத்தாஹ் மீது தேசதுரோக குற்றச்சாட்டை சுமத்தினார். அத்துடன் பத்திரிகையாளராக அவர் பாகிஸ்தானில் செயல்படுவதற்கும் தடை விதித்தார். இதன் காரணமாக பாகிஸ்தானைவிட்டே அவர் காலி செய்து கனடாவுக்கு சென்றார். அங்கு பத்திரிகையாளர் பணியை மீண்டும் தொடங்கிய பத்தாஹ், இறப்பு வரை பத்திரிகையாளாராகவே இருந்தார்.

இஸ்லாம் மதத்தையும், அதன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து பல்வேறு கட்டுரைகளை இவர் தொடர்ந்து எழுதி வந்து உள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களின் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட பத்திரிகையாளர் ஆனார். அதேபோல் இந்திய மக்கள் மத்தியில் இவரது எழுத்துக்கள் பிரபலமாகின. பாகிஸ்தானில் பிறந்தாலும் தன்னை இந்திய வம்சாவளி என்றே பல இடங்களில் இவர் காட்டிக்கொண்டார்.

Famous journalist Tarek Fatah died in Canada due to cancer

தன்னை ஒரு ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்தவர் என்று கூறிக்கொண்ட தாரிக் பத்தாஹ், 1840 ஆம் ஆண்டில் கட்டாய மதமாற்றத்தின் காரணமாக தன்னுடைய குடும்பம் இஸ்லாத்துக்கு மாறியதாகவும் பேசி இருந்தார். இஸ்லாம் குறித்த காட்டமாக கருத்துக்களுக்காக பல்வேறு விமர்சனங்களை உலகளவில் வாழும் இஸ்லாமியர்களிடம் பெற்று வந்தார் தாரிக் பத்தாஹ். இவரது கட்டுரைகள், புத்தகங்கள் இன்று வரை பலரால் வாசிக்கப்பட்டு வருகிறது.

தாரிக் பத்தாஹ் மறைவு குறித்து பதிவிட்டு உள்ள அவரது மகள் நடாஷா பத்தாஹ், “பஞ்சாபின் சிங்கம். இந்துஸ்தானின் மகன். கனடாவின் காதலன். உண்மையை பேசுபவர். நீதிக்காக போராடியவர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தவர். தாரிக் பத்தாஹ் காலமாகிவிட்டார். அவரை நேசித்தவர்கள் மற்றும் அவரை அறிந்தவர்களுடன் புரட்சி தொடரும். நீங்கள் எங்களுடன் இணைவீர்களா? 1949 – 2023.” என்று பதிவிட்டு உள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.