கர்நாடகாவில் வருகிற மே 10ம் தேதி சட்டபேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே இருப்பதால், கர்நாடாகவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மாநிலத்தில் பாஜக,
காங்கிரஸ்
மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
கர்நாடகாவில் பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரதான கட்சியான காங்கிரஸ் சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.
ஆனால் தனது கோட்டையான கர்நாடகாவில் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் காங்கிரஸ் தான் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக பின்னடவை சந்திக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
அரசு பணிகளை டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், ஹிஜாப் பிரச்சனை, முஸ்லீம்கள் மீதான ஓரவஞ்சனை, சிறுபான்மை மத எதிர்ப்பு, தலித்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, அமுல் மற்றும் நந்தினி பால் நிறுவன சண்டனை உள்ளிட்ட காரணிகள் பாஜகவிற்கு பெருத்த அடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் வாக்குறுதிகளும் மக்களை ஈர்த்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம், டிப்ளோமா படித்தவர்களுக்கு 1500 மற்றும் இலவச மின்சாரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் மக்களை அக்கட்சிகளின் பக்கம் இழுத்துள்ளன.
இந்த சூழலில் மாநிலத்தில் பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பு தற்போது வீடியோவாக பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அந்த வீடியோவில், பாஜக பிரச்சார வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்குவது பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் இந்தி மொழி திணிப்பு, அமுல் நந்தினி பிரச்சனை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஆகிய காரணிகள் மக்களை கொதிப்படையச் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.