புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது கடந்த வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்ட அந்த நேரத்தில் 3 பக்கங்களிலிருந்து தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். குறைந்தபட்சம் 36 ரவுண்டுகள் அவர்கள் துப்பாக்கியால் வாகனத்தை நோக்கி சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சீனாவில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தவிர, தீவிரவாதிகள் இரண்டு கையெறி குண்டுகளையும் வீசியதால் ராணுவ வாகனம் தீப்பிடித்து 5 வீரர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அங்கு காணப்பட்ட மோசமான வானிலை தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
இந்த தாக்குதலில் 3 அல்லது 4 தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும், தாக்குதல் நடத்திவிட்டு முன்னரே திட்டமிட்ட பாதையில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட இடம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளதால் புதிதாக ஊடுருவிய தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.