தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தொழிலாளர் திருத்த சட்டத்தில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதி வழங்கும் மசோதா திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 70 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட கருத்து கேட்டு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவுடன் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் திமுகவின் தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளர் நலத்துறையின் சட்ட முன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு தொழிற்சாலை சட்டம் 1948 இல் 65ஏ என்ற பிரிவில் தமிழக அரசே திருத்தம் செய்தது. திமுகவின் கூட்டணி கட்சிகளை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் தான் தொழிலாளர் நலத்துறையில் சட்ட முன்வடிவு மீதான செயலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.