சென்னையைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அங்கிருந்த போலீஸாரிடம், தன்னுடைய கடந்த கால காதல் கதையைச் சொன்ன அந்த இளம்பெண், தற்போது முன்னாள் காதலனால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை கண்ணீர்மல்க தெரிவித்தார். அதைக் கேட்ட தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸார், சம்பவம் நடந்த இடம் முகப்பேர் என்பதால் அங்குச் சென்று புகாரளியுங்கள் என்று கூறினர். அதற்கு இளம்பெண், நான் தற்போது குரோம்பேட்டையில்தான் தங்கியிருக்கிறேன். அதனால்தான் இங்கு வந்தேன் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து புகாரளிக்கவந்த இளம்பெண்ணை போலீஸார் அநாகரீகமாக பேசியதாக சொல்லப்படுகிறது.
அதனால் அந்தப் பெண், காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்தவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“நான் சென்னையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது முகப்பேரில் கடையில் வேலைப்பார்த்த கோவில்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு நாங்கள் இருவரும் காதலித்தோம். அதன்பிறகு இருவரும் நெருங்கி பழகினோம். அப்போதுமுதல் கிருஷ்ணா எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். எனக்கு மிரட்டல் கொடுத்தார். அதனால்தான் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கவந்தேன். ஆனால், போலீஸார், சரியாக விசாரணை நடத்தவில்லை. நான் குற்றம் சாட்டியிருக்கும் கிருஷ்ணாவுக்கு போன் செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். எனக்கு என் குடும்பத்தினரின் சப்போர்ட் இல்லை. அப்பா, அம்மா இல்லை. அதனால்தான் நான் தனியாகத்தான் காவல் நிலையத்துக்கு வந்திருக்கிறேன். எனக்கு ஏதாவது நடந்தால் கிருஷ்ணாதான் காரணம்” என்றார்.
இதுகுறித்து கிருஷ்ணாவிடம் பேசினோம். “நானும் அந்தப் பெண்ணும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பழகி வருகிறோம். அவளை உயிருக்கு உயிராக காதலித்தேன். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் என்னுடன் பேசுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதன்பிறகு என்னுடைய செல்போன் அழைப்புகளை அவள் எடுப்பதில்லை. நானும் அவளும் பழகியது அவளின் குடும்பத்தினருக்கு தெரியும். அவளின் தம்பி ஒருவன் என்னுடன் வேலைப்பார்க்கிறான். அதனால் என்னைப்பற்றி அவளின் குடும்பத்தினருக்கு நன்றாக தெரியும். தற்போது அவள் வேறு ஒரு பையனோடு பழகுவதாக அவளின் தம்பி என்னிடம் தெரிவித்தான். அதனால்தான் அவள் என்னை விட்டு பிரிந்து சென்றதோடு நான் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக தாம்பரம் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.
நானும் அவளும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறோம். அவள்தான் விருப்பப்பட்டு எனக்கு 48 பெர்சனல் வீடியோக்களை அனுப்பி வைத்திருந்தார். என்னிடம் அவள் பேசாமல் தவிர்த்தால் அவளின் பெரியப்பாவிடம் போனில் பேசினேன். அப்போது அவளின் பெரியப்பா, என்னை அவதூறாக பேசினார். அதனால்தான் அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ளதான் அவள் எனக்கு அனுப்பிய ஒரு பெர்ஷனல் வீடியோவை அவளின் பெரியப்பாவுக்கு அனுப்பி வைத்தேன். கோபத்தில் அவளிடம் பேசினேன். அதை எனக்கு எதிரான ஆதாரமாக மாற்றி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறாள். அவளை திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
இதற்கிடையில் புகாரளிக்கவந்த இளம்பெண், போலீஸார் தன்னை தாக்கியதாகவும் தன்னுடைய செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். அதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள், தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.