ஜி ஸ்கொயர் வெளியிட்ட பதில்: திமுக ஆட்சிக்கு முன்பே… அண்ணாமலையின் DMK Files-ல் தவறான தகவல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956ன் கீழ் அக்டோபர் 12, 2012ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ’ஜி ஸ்கொயர்’. இது கட்டுமானத் துறையில் இயங்கி வருகிறது. எங்களின் மற்ற நிறுவனங்கள் கூட்டாக ’ஜி ஸ்கொயர் குரூப்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. தொழில் முன்னோடிகளாக திகழும் இந்தியா புல்ஸ், முருகப்பா குழுமம், ஜேகே டயர்ஸ், காசா கிராண்டே போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இதுவரை 1,000 ஏக்கருக்கு மேல் நிலங்களை சிறப்பான முறையில் விற்பனை செய்துள்ளோம்.

ஜி ஸ்கொயர் நிறுவனம்

கட்டுமானத் துறையில் எங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பெஸ்ட் லக்ஸூரியஸ் பிளாட்டட் டெவலப்பர், பெஸ்ட் பிளாட்டட் டெவலப்மண்ட் ஆகிய விருதுகளை பெற்றுள்ளோம். சமூக அக்கறை உள்ள ஒரு பொறுப்பான நிறுவனமாக முக்கிய சமூக செயல்பாடுகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் எங்கள் நிறுவனம் சார்பில் 4,800 படுக்கைகளை மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளோம். 1,000க்கும் மேற்பட்ட பசு மாடுகளை இறைச்சிக் கூடங்களில் இருந்து மீட்டு பராமரித்து வருகிறோம்.

தனி நபர்கள் வெறுப்பு பிரச்சாரம்

சுற்றுச்சூழல் சார்ந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் சில தனி நபர்கள் வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றனர். மே 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகே எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பல கட்டுக் கதைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. தாங்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.

G Square நிறுவனத்தின் கடிதம்

திமுக ஆட்சிக்கு முன்பே

இவற்றில் எந்த முகாந்திரமும் இல்லை. திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்திய நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டே இதுவரை எங்கள் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. முறையாக தணிக்கை செய்து, சட்ட ரீதியாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனம் எந்தவித ஊழல்களிலும் ஈடுபட்டதில்லை. ஏப்ரல் 14, 2023 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் வெளியிட்ட DMK Filesல் எங்கள் நிறுவனமான ஜி ஸ்கொயர் குறித்து நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை.

ஊழல் பணம் அல்ல

நீங்கள் வெளியிட்ட வீடியோவில் ஜி ஸ்கொயர் நிறுவன உரிமையாளர்கள் திமுகவின் முதல் குடும்பத்தினர் என்றும், நிறுவனத்தின் மொத்த வருமானம் 38,827.70 கோடி ரூபாய் என்றும், இது ஊழல் பணம் என்றும் குறிப்பிட்டீர்கள். இது பொய்யான தகவல். இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எங்கள் நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை. ஜி ஸ்கொயர் மற்றும் எங்கள் பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்களை தவறான மதிப்புகளோடு நீங்கள் சித்தரித்துள்ளீர்கள்.

கூட்டு முயற்சி

எங்களின் பல கட்டுமான திட்டங்கள் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் நாங்கள் வாங்கி விற்கும் நபராக செயல்படுகிறோம். இணையத்திலும், எங்களிடமும் உள்ள வில்லங்க சான்றிதழ்களின் மூலம் பல்வேறு கால கட்டங்களில் 6,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மனைகளை விற்றதை அறிய முடியும்.

பூர்வாங்க ஒப்பந்தங்கள்

பல வாடிக்கையாளர்கள் வங்கி கடன்களின் மூலமாகவே எங்களிடம் நிலங்களை வாங்கியுள்ளனர். நீங்கள் வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கடினமாக உழைத்து ஈட்டிய பணம் மூலமும், வங்கிகளில் கடன் பெற்று நிலம் வாங்கிய வாடிக்கையாளர்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. நாங்கள் வாங்கி விற்ற நிலங்களுக்கு உரிய ஆதாரங்கள் இருக்கின்றன. சில திட்டங்களில் பூர்வாங்க ஒப்பந்தங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன. அனால் நீங்கள் அனைத்துமே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சொத்து எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஆதரவு தேவை

முறையாக ஆய்வு செய்தால் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய் எனத் தெரியவரும். நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன், சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம். இதில் உங்களின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை அணுகுங்கள். தேவையான விளக்கங்களை அளிக்க நாங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.