“திமுக ஆட்சியில் போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம்” என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பரவிவரும் கோவிட் தொற்றுக்கு இடையே சுற்றுலாத் தலங்கள் மற்றும் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, பரவி வருவது வீரியமற்ற வைரஸ், இதனால், பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை. இந்திய அளவில் 11 ஆயிரம் தொற்று எண்ணிக்கை வந்தாலும்கூட தமிழ்நாட்டில் பாதிப்பு 500 வரை சென்று தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
போலி மருத்துவர்கள் தற்போது முறையாகக் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இது நீண்ட காலமாக இருந்தாலும், இந்த ஆட்சியில் தான் முறையாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் கடந்த வாரம் ஒரே நாளில் 73 போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
உக்ரைன் மாணவர்கள் மருத்துவப் படிப்பு தொடர்வது குறித்து மத்திய அரசு அதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது.இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்திலுள்ள ஹோமியோபதி கல்லூரி கட்டிடங்கள் சேதம் அடைந்திருப்பதை கணக்கிட்டு புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் படிக்க பரிசீலிக்கிறோம். முதலில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் வந்துவிட்டால் புதிய ஹோமியோபதி கல்லூரிகள் துவங்குவது பற்றியும் யோசிக்கலாம்” என்றார்.