நெல்லை மாவட்டத்தில், ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு வேண்டி பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வீட்டுக்குள் நுழைந்த விஷப் பாம்புடன் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம், வன்னிக்கோனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளியான இவரின் மனைவி, சமரச செல்வி. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். சமரச செல்விக்குச் சொந்தமான குடும்ப நிலத்தில் 2019-ம் ஆண்டு, பசுமை வீடு திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டியிருக்கின்றனர். வீட்டுக்கான மின் இணைப்பு கேட்டு 2019-ல் மனு செய்தும், தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இது தொடர்பாகப் பலமுறை மின்வாரியம் மற்றும் வருவாய்த் துறை உயரதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை என சமரச செல்வி புகார் தெரிவிக்கிறார். தங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு சில வாரங்களுக்கு முன்புகூட ஆட்சியரிடம் தன் மூத்த மகளுடன் வந்து மனு அளித்திருக்கிறார். அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மகளின் கல்வியைக் கவனத்தில் கெண்டாவது விரைவாக மின்சார இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனாலும் அவருக்கு இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை.
முருகன்-சமரச செல்வி வீட்டில் மின்சார இணைப்பு இல்லாத நிலையில், இரவு நேரங்களில் வீட்டுக்குள் கொடிய விஷம் நிரம்பிய பாம்பு உள்ளிட்டவை நுழைந்து உயிருக்கு அச்சறுத்தலாகி வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று இரவில் அவர்களின் வீட்டுக்குள் மூன்றடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு நுழைந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அதைப் பார்த்துவிட்டதால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை.

அந்த கண்ணாடி விரியன் பாம்பை அடித்துக் கொன்றுவிட்டு அதைப் பத்திரமாகப் பையில் வைத்திருந்த முருகன் குடும்பத்தினர், இன்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் தங்களுடைய வீட்டுக்கு மின்சார வசதி அளிக்கக்கோரி மனு அளிக்க வந்தனர். பையில் பாம்பு வைத்திருந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் வந்தவர்களை, வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களிடம் இருந்த உயிரிழந்த பாம்பை அப்புறப்படுத்தினர். கண்ணாடி விரியன் பாம்பு கையில் ஏந்தியபடி மனு அளிக்க வந்தவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.